அவனியாபுரத்தில் ஜல்லிக்கட்டு காளையை பிடிப்பதில் தகராறு : இளைஞர்களுக்கு அரிவாள் வெட்டு.. சாலை மறியலால் பரபரப்பு!!

14 July 2021, 9:40 am
Jallikattu Kaalai - Updatenews360
Quick Share

மதுரை : அவனியாபுரத்தில் 2 நாட்களுக்கு முன் ஜல்லிக்கட்டு காளை பிடித்ததில் ஏற்பட்ட தகராறால் காளையை பிடித்த வீரர்களை பழிவாங்க 2 பேரை அரிவாளால் வெட்டிய கும்பலை போலீசார் தேடி வருகின்றனர்.

மதுரை அவனியாபுரத்தில் இரண்டு நாட்களுக்கு முன் ஜல்லிக்கட்டு காலை பிடிப்பதில் தகராறு ஏற்பட்டது. இதில் ஜல்லிக்கட்டு காளையை பிடித்த அதே பகுதியைச் சேர்ந்த சக்தி என்பவரது மகன் பாலமுருகன் (வயது 20) மற்றும் மன்னார் என்பவரது மகன் ஆத்தா என்ற திருமுருகன் (வயது 22), ஆகிய இருவரையும் மறுநாள் காலையில் 10 பேர் கொண்ட கும்பல் பட்டா கத்தி உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களுடன் அவனியாபுரம் சாலையில் இருவரையுமே விரட்டியுள்ளனர்.

இதில் ஆத்தா என்ற திருமுருகன் தப்பிவிட அகப்பட்ட பாலமுருகன் வெட்டுக்காயங்களுடன் அரசு ராஜாஜி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.

மீண்டும் ஆத்தாவை நேற்று இரவு 8.30 மணி அளவில் மர்ம நபர்கள் சிலர் துரத்திய நிலையில், ஆத்தா என்று நினைத்து அவனியாபுரம் பகுதிக்கு துக்கம் விசாரிக்க சென்னையில் இருந்து வந்த சின்ன சதீஷ்குமார் (வயது 18) என்ற இளைஞரை அய்யனார் கோவில் முன்புமர்ம நபர்கள் வெட்டியுள்ளனர்.

தொடரும் சம்பவத்தால் அவனியாபுரம் கிராம மக்கள் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் அரை மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

சம்பவம் அறிந்து விரைந்து வந்த அவனியாபுரம் காவல் ஆய்வாளர் பிரபு மற்றும் திருப்பரங்குன்ற சரக உதவி ஆணையர் சண்முகம் ஆகியோர் நேரில் வந்து கிராம மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி குற்றவாளிகளை விரைந்து பிடிப்போம் என உறுதி அளித்ததின் பேரில் கிராம மக்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.

Views: - 146

0

0