100 சதவீதம் முழு ஊரடங்கை பின்பற்றிய மாவட்டம் : வெறிச்சோடிய சாலைகள்.. தயார் நிலையில் 7 மையங்கள்.. ஆட்சியர் தகவல்!!
Author: Udayachandran RadhaKrishnan9 January 2022, 11:18 am
விழுப்புரம் : கொரோனா சிகிச்சை அளிக்க 7 மையங்களில் 2800 படுக்கை வசதிகள் தயார் நிலையில் உள்ளதாகவும், முழு ஊரடங்கினை இன்று பொதுமக்கள் நூறு சதவீதம் பின்பற்றுவதாக ஆட்சியர் மோகன் தெரிவித்துள்ளார்.
கொரோனா மற்றும் ஒமிக்ரான் தடுப்பு நடவடிக்கையாக இன்று தமிழகம் முழுவதும் முழு ஊரடங்கு கடைபிடிக்கப்படுகிறது. இந்நிலையில் ஊரடங்கினை முன்னிட்டு விழுப்புரம் மாவட்டத்தில் 62 இடங்களில் சோதனை சாவடிகள் அமைக்கப்பட்டு 1700 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
முழு ஊரடங்கு காரணமாக விழுப்புரம் மாவட்டத்திலுள்ள அனைத்து வணிக கடைகள் முழுவதுமாக மூடப்பட்டுள்ளதால் அனைத்து சாலைகளிலும் வாகன போக்குவரத்தின்றி வெறிச்சோடி காணப்படுகின்றன.
பொது போக்குவரத்து சேவையும் நிறுத்தப்பட்டுள்ளதால் எப்பொழுதும் பரபரப்பாக காணப்படும் விழுப்புரம் புதிய பேருந்து நிலையம், பழைய பேருந்து நிலையம், திரு.வி.க வீதி, பாகர்ஷா வீதி, எம் ஜி ரோடு ஆகிய பகுதிகளில் ஆள் நடமாட்டமின்றி வெறிச்சோடி காணப்படுகின்றன.
வாகனங்களில் வருபவர்கள் மருத்துவம் மற்றும் அவசர தேவைகளுக்கு மட்டுமே அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். தேவையில்லாமல் இரு சக்கர வாகனங்களில் வருபவர்கள் மீது அபராதம் விதிக்கப்பட்டு வாகனங்களும் பறிமுதல் செய்யப்பட்டு வருகின்றன.
இந்நிலையில் முழு ஊரடங்கினை பொதுமக்கள் சரியாக கடைபிடிக்கிறார்களா என்பது குறித்து ஆட்சியர் மோகன் மற்றும் எஸ் பி ஸ்ரீநாதா விழுப்புரம் நகர பகுதிகளில் ஆய்வு மேற்கொண்டனர். ஆய்வின் போது தேவையில்லாமல் இரு சக்கர வாகனத்தில் வந்தவர்களுக்கு எச்சரிக்கை செய்தனர்.
அதனை தொடர்ந்து பேட்டியளித்த ஆட்சியர் மோகன் முழு ஊரடங்கு விழுப்புரம் மாவட்டத்தில் மக்கள் முழுமையாக கடைபிடிப்பதாகவும்,மாவட்டத்தில்
கொரனோ சிகிச்சை அளிக்க 7 மையங்களில் 2800 படுக்கை வசதிகள் தயார் நிலைபடுத்தப்பட்டுள்ளதாகவும், இதில் 50 சதவிகிதம் ஆக்ஸிஜன் வசதி கொண்ட படுக்கைகள் தயார் நிலையில் உள்ளதாக தெரிவித்தார்.
மேலும் பால், மெடிக்கல் ,அவசர தேவைகளுக்கு மட்டுமே கடைகள் திறக்கப்பட்டுள்ளதாகவும், திருமண நிகழ்ச்சிகளுக்கு செல்பவர்கள் திருமண பத்திரிக்கை கையில் கொண்டு வருபவர்கள் அனுமதிக்கப்பட்டு வருவதாகவும் தெரிவித்துள்ளார்.
0
0