திமுகவும் தினமலரும்.! தினமலருடன் ஸ்டாலினை ஒப்பிட்டு பேசினாரா துரைமுருகன்?

9 August 2020, 2:47 pm
Duraimurugan - Updatenews360
Quick Share

சென்னை : தினமலரில் வெளியான செய்தி குறித்து திமுக பொருளாளர் துரைமுருகன் வெளியிட்டுள்ள கருத்து கட்சி தலைமையை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.

தி.மு.க ஆரம்பித்த காலத்தில் இருந்து கருணாநிதிக்கு உற்ற துணையாக இருந்தவர் துரைமுருகன். அரசியல்வாதிகளில் அதிகம் பேருக்கு நகைச்சுவை உணர்வு உண்டு. அதிலும் நக்கலும் குசும்பும் உள்ள ஒருவர் என்றால் அது துரைமுருகன் தான். எப்போதும் அவர் பேச்சில் ஒரு குசும்பு வைத்துதான் பேசுவார்.

அதனால்தான் என்னவோ எப்போதும் கருணாநிதியுடன் துரைமுருகன் வலம் வந்துகொண்டே இருப்பார். ஏன் கருணாநிதி கலந்து கொள்ளும் அனைத்து கூட்டத்திலும் துரைமுருகனுக்கு என்று தனியிடம் உண்டு. எங்கு சென்றாலும் துரைமுருகனை அழைத்துதான் செல்வார்.

இந்த நிலையில், துரைமுருகன் வெளியிட்டுள்ள அறிக்கை அண்ணா அறிவாலயத்தையே குலுங்கச் செய்துள்ளது. அந்த அறிக்கையில் கடந்த 7ஆம் தேதி வெளியிட்டுள்ள தலைப்பு செய்திகளில் தன்னை களங்கப்படுத்தியுள்ள தினமலர் பத்திரிகையை வன்மையான கண்டிக்கிறேன் என பதிவிட்டு விளக்கம் அளித்துள்ளார். ஆனால் அந்த விளக்கம் துரைமுருகன் தனது உள்ளக் குமுறலை வெளிப்படுத்தியுள்ளார் என்பதே உண்மை.

திமுக வில் பொதுச்செயலாளர் பதவி இன்னும் காலியாக உள்ளது. அந்த பதவியை பறிக்க துரைமுருகன் கழகத்திற்குள் கலகத்தை ஏற்படுத்துவது போல தினமலரில் செய்தி வெளியிட்டுள்ளதாக துரைமுருகன் குற்றம்சாட்டியுள்ளார். தன்னை பற்றிய வரலாறு அறியாக தினமலர் ஏன் அப்படி ஒரு செய்தியை வெளியிட வேண்டும். பதவி ஆசைக்காக திமுவிற்கு வரவில்லை, எத்தனை பதவிகள் கிடைக்காமல் போய் இருந்தாலும், இரு வண்ணக் கொடியை பிடித்து கழகத்திற்காக குரல் கொடுத்தவன், ஆசாபாசத்திற்கு அப்பாற்ப்பட்ட என்னை பற்றி தில்லுமுல்லு பிரசாரம் செய்யும் தினமலருக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை என கூறியுள்ளார்.

இப்படி அறிக்கை வெளியிட்டுள்ள துரைமுருகன் குறித்து எத்தனையோ பத்திரிகைகள் விமர்சனம் செய்திருந்தும், இந்த ஒரு விஷயத்திற்காக ஏன் இவ்வளவு மனக்குமுறல்களை வெளியிட்டுள்ளார் என்று புரியவில்லை. ஏற்கனவே தினமலருக்கும் திமுகவிற்கும் ஏழாம் பொருத்தம், தினமலருக்கும் திமுகவிற்கும் ஆரம்பத்தில் இருந்தே ஒரு நெருடல் இருந்து வருகிறது. ஆரம்பத்தில் தினமலர் பத்திரிகையை கருணாநிதி தினமலம் என்று கூட சொல்லியிருக்கிறார். இப்படி இந்த பத்திரிகையை பற்றி திமுகவினர் விமர்சனம் செய்வது இது முதல்முறையல்ல.

ஆனால் துரைமுருகன் வெளியிட்டுள்ள அறிக்கையில், பதவி ஆசை பிரதிபலித்தது போன்றும், தினமலரை திட்டுவது போல ஸ்டாலினை தாக்கி பேசியது போல உள்ளது. இந்த அறிக்கை அறிவாலயத்தில் புகையை ஏற்படுத்தியுள்ளது என்பதே நிதர்சனமான உண்மை.