செம்மரக்கட்டைகள் பதுக்கி வைத்திருந்த திமுக நிர்வாகி கைது

13 January 2021, 10:21 pm
Quick Share

காஞ்சிபுரம்: உத்திரமேரூர் அருகே செம்மரக்கட்டைகள் பதுக்கி வைத்திருந்த திமுக நிர்வாகியை போலீசார் கைது செய்து, அவரிடமிருந்த 10 டன் எடையுள்ள செம்மரக் கட்டைகளை பறிமுதல் செய்தனர்.

காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூர் அடுத்த தோட்டநாவல் கிராமத்தை சேர்ந்தவர் திமுக பிரமுகர் ஜெயக்குமார். இவர் தோட்டநாவல் கிராமத்தில் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவராக பதவி வகித்தவர். இவர் வீட்டின் எதிரே ஆந்திர மாநிலத்தை சேர்ந்த லாரி ஒன்றில் செம்மரக்கட்டைகள் உள்ளதாக உத்திரமேரூர் காவல்துறைக்கு ரகசிய தகவல் கிடைத்தது. தகவலின்பேரில் உத்திரமேரூர் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சோதனையிட்டனர். அங்கு பல லட்சம் மதிப்பிலான 10 டன் செம்மர கட்டைகள் ஆந்திர மாநில லாரி ஒன்றில் இருப்பது தெரியவந்தது. இதையடுத்து உத்திரமேரூர் போலீசார் திமுக பிரமுகர் ஜெயக்குமாரை கைது செய்து இது குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். தப்பி ஓடி தலைமறைவான கணேசன் என்பவருக்கும் வலை வீசியுள்ளனர்.

மேலும் இந்த செம்மரக் கட்டைகள் எங்கிருந்து கொண்டு வரப்பட்டது யார் கொண்டு வந்தனர். யார் யாருக்கு தொடர்ப்புள்ளது என்று பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர். கடந்த 8 மாதங்களுக்கு முன்பு ஆந்திரா மாநிலத்தில் இருந்து சித்தூர் வழியாக 10 டன் செம்மரக் கட்டையை எடுத்துக் கொண்டு தமிழகம் வந்த ஆந்திரா நபர்களிடமிருந்து மிகப் பிரபல ரவுடி படப்பை குணாவின் ஆட்கள் கடத்தி கொண்டு சென்றனர். பின்னர் இந்த லாரி மற்றும் செம்மர கட்டைகள் எங்கே போனது என்பது மிக ரகசியமாக இருந்த நிலையில் தற்போது திமுக நிர்வாகியிடம் இருந்து 10 டன் செம்மரக் கட்டைகளை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர்.