கொதுகை ஏரியில் விதிகளை மீறி மண் எடுக்கும் ஆளும் கட்சியினர்… லாரிகளை சிறைபிடித்து பொதுமக்கள் போராட்டம்…!!

Author: Babu Lakshmanan
17 May 2023, 2:39 pm

காஞ்சிபுரம் மாவட்டம் முசரவாக்கம் கொதுகை ஏரியில் விதிகளை மீறி அதிக ஆழத்துக்கு மண் எடுக்கப்படுகிறது. இதனை கண்காணித்து உரிய நடவடிக்கை எடுக்கவும், நிர்ணயிக்கப்பட்ட அளவுக்கு மண் எடுப்பதை உறுதி செய்ய வேண்டும் என்றும், விவசாயிகளும் பொதுமக்களும் வலியுறுத்தி மாவட்ட நிர்வாகம் இடத்திடம் தொடர்ந்து மனு அளித்து வருகின்றனர்.

முசரவாக்கம் கொதுகை ஏரியில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும், மேலும் ஏரியில் உள்ள மண்ணை அப்புறத்தப்படுத்தி தூர்வார வேண்டும், கரையை பலப்படுத்தி தர வேண்டும் என்று விவசாயிகள் வலியுறுத்தியதை தொடர்ந்து, மாவட்ட நிர்வாகத்தின் ஒப்புதலுடன் நீர்வள ஆதாரத்துறையும் இதற்கான நடவடிக்கையை எடுத்தது. அதனடிப்படையில் இந்த ஏரியில் 250 மீட்டர் நீளத்துக்கும், 126 மீட்டர் அகலதுக்கும், 3 அடி ஆழத்துக்கு சுமார் 5000 லோடு மண் எடுப்பதற்கு மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

ஆனால், இந்த ஏரியில் 8 க்கும் மேற்பட்ட ராட்சத பொக்லைன் இயந்திரங்களை வைத்துக் கொண்டு விதிகளை மீறி பல அடி ஆழத்துக்கு மண் எடுக்கப்பட்டு வருகிறது. கடந்த ஒரே மாதத்தில் சுமார் 15,000 க்கும் மேற்பட்ட லோடுகள் எடுத்து தனியார் நிறுவனங்களுக்கு ஐந்தாயிரம் ரூபாய் என்ற அளவில் விற்கப்பட்டு வருகிறது. ஏரியில் அதிக அளவு ஆழத்துக்கு மண் எடுப்பது பாதிப்பை ஏற்படுத்தும் என்று அந்தப் பகுதி விவசாயிகள் புகார் கூறி வருகின்றனர்.

மாவட்ட நிர்வாகம் விவசாயிகளின் புகார்களை கண்டுகொள்ளாததாலும், நூற்றுக்கணக்கான லாரிகள் இந்த ஏரியில் இருந்து மண் எடுத்துக் கொண்டு தினம்தோறும் அந்த கிராமத்தின் வழியாக அதிக வேகத்தில் செல்வதாலும், அவ்வப்போது விபத்துகள் ஏற்பட்டு வருவதாக அப்பகுதி மக்கள் கூறி, அந்த வழியாக செல்லும் லாரிகளை சிறை பிடித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தினம்தோறும் 500 முதல் 600 வண்டிகள் எங்கள் கிராமத்து வழியே வண்டல் மண் எடுத்து செல்வதால் சாலைகள் பழுதடைந்து உள்ளது. விபத்துகள் அவ்வப்போது ஏற்படுகின்றது, மேலும் அளவுக்கு அதிகமாக ஏரியில் மண் எடுப்பதால் மழைக்காலத்தில் கால்நடைகள் மற்றும் மனிதர்கள் அந்த பள்ளங்களில் விழுந்து உயிரிழக்கும் அபாயம் உள்ளது.

எனவே அளவுக்கு அதிகமாக மண் எடுத்து விற்பனை செய்த திமுகவை சேர்ந்த நபர்கள் மீது நடவடிக்கை எடுத்து அவர்களிடம் பணத்தை மீட்டு அரசாங்க கருவூலத்தில் சேர்க்க வேண்டும் எனக்கூறி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதால் அந்தப் பகுதியில் சுமார் ஒரு மணி நேரம் பரபரப்பு காணப்பட்டது. இந்தப் பகுதியில் லாரிகள் அதிகம் செல்வதால் பொதுமக்கள் பாதிக்கப்படாமல் இருக்க உரிய பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்வதுடன், ஏரியில் விதிகளை மீறி மண் எடுக்கப்படுவதை தடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைத்தனர்.

இது குறித்து நீர்வளத்துறை அதிகாரிகள் கூறும்போது, உத்தரவில் குறிப்பிட்ட அளவுக்கு மேல் மண் எடுக்க கூடாது என்பதை ஒப்பந்ததாரரிடம் வலியுறுத்துவோம் என்றனர். மாவட்ட நிர்வாகமும் ஒப்பந்ததாரரை அழைத்து எச்சரிக்கை விடுத்துள்ளது, என்றனர்.

  • yogi babu explains about not attended gajaana audio release function பொய் பொய்யா பேசாதீங்க- தரக்குறைவாக பேசிய தயாரிப்பாளருக்கு யோகி பாபு பதிலடி!