’25 ஆண்டுகளுக்கு பிறகு சட்டப்பேரவையில் காலடி எடுத்து வைத்தவன் நான்’ : முக ஸ்டாலின்

6 February 2021, 3:53 pm
stalin - updatenews360
Quick Share

25 ஆண்டுகள் அரசியல் பணியாற்றிய பிறகுதான் சட்டப்பேரவைக்குள் நுழைந்தேன் என்று பிரச்சாரக் கூட்டத்தில் திமுக தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

இன்று காலை, திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவரும், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான மு.க.ஸ்டாலின் அவர்கள், கன்னியாகுமரி மாவட்டம், நாகர்கோவில் – ஸ்காட் கிறிஸ்டியன் கல்லூரி மைதானத்தில் நடைபெற்ற, “உங்கள் தொகுதியில் ஸ்டாலின்“என்ற மக்களின் குறைகேட்கும் தேர்தல் பரப்புரை நிகழ்ச்சியில் பங்கேற்று, அப்பகுதி மக்கள் குறைகளைத் தீர்க்கக் கோரி அளித்த மனுக்களைப் பெற்றுக் கொண்டு, அவர்களிடம் நேரிலும் குறைகளைக் கேட்டறிந்தார்.

இந்த நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது :- கன்னியாகுமரி மாவட்டம், இந்த நாகர்கோவில் பகுதியில் ‘உங்கள் தொகுதியில் ஸ்டாலின்’என்ற தலைப்பில் நடைபெறும் இந்த சிறப்பான நிகழ்ச்சி, இது நிகழ்ச்சியா அல்லது மாநாடா என்று சொல்லும் அளவிற்கு மிக எழுச்சியோடு, ஏற்றத்தோடு, ஆர்வத்தோடு, ஆரவாரத்தோடு இந்த நிகழ்ச்சியை நம்முடைய மாவட்டக் கழகச் செயலாளர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் எல்லாம் இணைந்து மாவட்டக் கழகங்களின் ஒத்துழைப்போடு, கழக முன்னோடிகளின் அரவணைப்போடு, அனைத்திற்கும் மேலாக உங்கள் உற்சாகத்தோடு, ஊக்கத்தோடு இந்த நிகழ்ச்சியை ஏற்பாடு செய்திருக்கிறார்கள். அவர்களுக்குத் தலைமைக் கழகத்தின் சார்பில், திராவிட முன்னேற்ற கழகத்தின் தலைவர் என்ற முறையில் அவர்களுக்கு நன்றியைச் சொல்ல விரும்புகிறேன்.

மாவட்டக் கழகச் செயலாளர்கள் உங்களையெல்லாம் வரவேற்று மகிழ்ந்திருந்தாலும், நானும் உங்களை எல்லாம் வருக… வருக… வருக… என வரவேற்க விரும்புகிறேன். 3 மாதங்களில் உங்கள் பிரச்சனைகள் எல்லாம் தீர்ந்து விடும் என்ற நம்பிக்கையோடு நீங்களெல்லாம் பல்லாயிரக்கணக்கில் இங்கு வந்திருக்கிறீர்கள். நீங்கள் உட்கார்ந்திருக்கும் இந்தக் காட்சியை நான் பார்க்கிறேன். இதுவரையில் நான் கலந்துகொண்ட நிகழ்ச்சிகளையும் ஒப்பிட்டு பார்க்கிறேன். மிகவும் அமைதியாக, கட்டுப்பாடாக, இந்த ஆட்சியை இன்னும் 3 மாதங்களில் தூக்கி எறிய வேண்டும் என்ற அந்த உறுதியோடு நீங்கள் எல்லாம் வந்து உட்கார்ந்திருக்கிறீர்கள்.

நீங்கள் இந்த அரங்கத்தின் உள்ளே நுழைவதற்கு முன்பு வெளியில் நம்முடைய தொண்டர்கள், இளைஞர்கள் 200-க்கும் மேற்பட்டோர் உங்கள் பெயர், முகவரி, நீங்கள் கொடுக்கின்ற கோரிக்கை மனுக்கள், அதே போல நீங்கள் சொல்கின்ற பிரச்சனைகளைப் பதிவு செய்து கொண்டிருப்பார்கள். நீங்கள் பதிவு செய்யும் போது உங்களிடம் ஒரு ரசீது – அடையாள அட்டை கொடுத்திருப்பார்கள். இந்த ரசீது தான் மிகவும் முக்கியம். இதை ஏன் இவ்வளவு வலியுறுத்தி, வற்புறுத்தி சொல்கிறேன் என்றால் இதற்கு பல உரிமைகள் இருக்கின்றன.

என்ன உரிமை என்றால் தேர்தல் நடந்து முடிந்து, முடிவுகள் வந்து, தி.மு.க. ஆட்சி என்பது உறுதியாகி, நான் பதவிப் பிரமாணம் எடுத்துக் கொண்டு கோட்டையில் உட்கார்ந்த பிறகு, 100 நாட்களில் உங்கள் மனுக்கள் தொடர்பாக ஏதாவது நடக்கவில்லை என்றால் நீங்கள் உரிமையோடு கோட்டைக்குள் வரலாம். கோட்டைக்குள் மட்டுமன்று, முதலமைச்சர் அறைக்குள்ளேயும் நீங்கள் வந்து கேட்கலாம்.

அது மட்டுமின்றி, இங்கு வந்திருக்கும் அத்தனை பேரையும் நான் பேச வைக்க வேண்டும் என்ற ஆசை எனக்கு மட்டுமின்றி உங்களுக்கும் இருக்கிறது. இங்கு பல்லாயிரக்கணக்கில் திரண்டு இருக்கிறீர்கள். இவ்வளவு பேரையும் பேச வைத்தால் எவ்வளவு நேரம் ஆகும் என்பது உங்களுக்குத் தெரியும். ‘பேச்சைக் குறைத்து செயலில் திறமையை காட்ட வேண்டும்’. இதுதான் என்னுடைய கொள்கை. அதனால் அதிகம் பேச வேண்டிய அவசியம் இல்லை. 10 பேர் பேசினால் போதும் என்று நினைக்கிறேன். அந்த 10 பேரும் சுருக்கமாக பேசுமாறு கேட்டுக் கொள்கிறேன்.

நீங்கள் உங்கள் உள்ளூர் பிரச்சனைகளான, தெருவிளக்கு பிரச்சினை, சாக்கடை பிரச்சினை, குடிநீர் பிரச்சினை, பேருந்து பிரச்சினை, மருத்துவமனை பிரச்சினை, பள்ளிக்கூடப் பிரச்சினை, பேருந்து வசதி பிரச்சினை, 100 நாள் வேலைத்திட்ட பிரச்சினை, ஓய்வூதியம், முதியோர் உதவித் தொகை, மகளிர் சுய உதவி குழு, வேலைவாய்ப்பு இதுபோன்ற பிரச்சனைகளைத் தான் சொல்லப்போகிறீர்கள்.

இப்போது இந்தப் பெட்டியில் இருக்கும் உங்கள் மனுக்களில் இருந்து நான் சில பெயர்களை எடுக்கப் போகிறேன். அந்தப் பெயர்களில் இருப்பவர்களை அழைக்கப்போகிறேன். தயவுசெய்து சுருக்கமாக பேசுமாறு கேட்டுக்கொள்கிறேன், எனக் கூறினார்.

இதைத் தொடர்ந்து, மக்களுடன் கலந்துரையாடலில் ஈடுபட்ட போது அவர் பேசியதாவது :- 1966-ஆம் ஆண்டு முதல் கழகப் பணி, பொதுப்பணிகளை நான் ஆற்றி வந்தாலும், 1989-ஆம் ஆண்டு தான் சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடக் கூடிய வாய்ப்பு எனக்கு கிடைத்தது. அரசியலில் நுழைந்ததும் நான் சட்டமன்றத்துக்குள் நுழைந்துவிடவில்லை. சுமார் 25 ஆண்டுகள் பணியாற்றிய பிறகுதான் சட்டமன்றத்துக்குள் நுழைந்தேன். அப்போதே நீங்கள் அமைச்சர் ஆகப் போகிறீர்களா என்று நிருபர்கள் என்னைக் கேட்டார்கள். ”எனக்கு அமைச்சர் பதவி வேண்டாம் என்று தலைவர் கலைஞர் அவர்களிடம் கூறிவிட்டேன்” என்று சொன்னேன்.

”கழகத்திற்கு என்னை விட உழைத்தவர்கள், தியாகம் செய்தவர்கள் ஏராளமாக இருக்கிறார்கள். அவர்கள் அத்தனை பேரையும் அமைச்சர்களாக ஆக்க முடியாது. அந்தப் பட்டியலில் உள்ளவர்கள் தான் அமைச்சர்கள் ஆக வேண்டும்” என்று அப்போதே பேட்டி அளித்தவன் நான்.

”இளைஞரணிச் செயலாளர் என்ற முறையில் ஸ்டாலினுக்கு அமைச்சர் பதவி உண்டா?” என்று தலைவர் கலைஞரிடம் நிருபர்கள் கேட்டார்கள். ”அமைச்சர் ஆகக்கூடிய எல்லாத் தகுதிகளும் அவருக்கு இருக்கிறது. ஆனால் அவர் என் மகன் என்பதால் அந்தத் தகுதியை இழந்துவிட்டார்” என்று தலைவர் கலைஞர் அவர்கள் சொன்னார்கள்.

இதை இன்று நான் சுட்டிக் காட்டுவதற்குக் காரணம், மகன் என்பதற்காக என்னை வளர்த்தவரல்ல தலைவர் கலைஞர் அவர்கள். நானும் அவர் மகன் என்பதற்காக உழைக்காமல் இருந்துவிடவில்லை. இன்று உங்களில் ஒருவனாக, லட்சக்கணக்கான தொண்டர்களால் நான் ஏற்றுக் கொள்ளப்பட்டு இருக்கிறேன் என்றால் அதற்குக் காரணம், திராவிட இயக்கத்தின் மீது நான் கொண்ட மாறாத பற்றும், அந்தக் கொள்கைக்காக நாளும் நான் உழைத்த உழைப்பும் தான்!

ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு அ.தி.மு.க.வில் ஏற்பட்ட குழப்பத்தைப் பயன்படுத்தி தி.மு.க. ஆட்சி அமைத்துவிட வேண்டும் என்று பலரும் சொன்னார்கள். அ.தி.மு.க.வில் இருந்தே பலரும் எங்களுக்குத் தூது விட்டார்கள்.

அப்படி யார் யாரெல்லாம் தூதுவிட்டார்கள் என்பதை நான் சொல்ல விரும்பவில்லை. அவர்களது மனச்சாட்சிக்கு இது தெரியும். அப்படி ஆட்சி அமைத்திருந்தால் அது கழக அரசாக அமைந்திருக்காது. கலைஞர் அரசாக அமைந்திருக்காது. அப்படி முதலமைச்சராக விரும்பாதவன் நான்.

கோடிக்கணக்கான மக்களால் வாக்களிக்கப்பட்டு கழகம் ஆட்சி அமைக்க வேண்டும் என்பதே எனது நோக்கம். அத்தகைய ஆட்சி தான் விரைவில் அமைய இருக்கிறது, எனக் கூறினார்.

Views: - 0

0

0