அண்ணாமலையை ‘அவன் இவன்’ என பேசிய திமுக அமைச்சர் : அடுத்தடுத்து ஒருமையில் பேசி சர்ச்சையில் சிக்கும் அமைச்சர்கள்!!

Author: Udayachandran RadhaKrishnan
16 December 2021, 6:02 pm
Ministers Ugly Speech - Updatenews360
Quick Share

திமுக அரசு ஆட்சிக்கு வந்ததுலிருந்து அமைச்சர்களுக்கும் என்ன ஆனதே என்றே தெரியவில்லை. நரம்பில்லாத நாக்கு, நாவடக்கம் இல்லாமல் ஒருமையில் பேசி அடிக்கடி வருத்தம் தெரிவித்து வருகின்றனர்.

அந்த வகையில் சட்டப்பேரவைத் தேர்தலுக்கு முன்பாக திமுகவின் முன்னணி தலைவர்களான துரைமுருகன் கே.என்.நேரு போன்றவர்கள் கூட்டணிக் கட்சித் தலைவர்களை ஒருமையில் பேசியதாக கூறப்பட்டது. அது சர்ச்சையாக மாறிய பின்பு, இருவரும் வருத்தம் தெரிவித்தனர். கொரோனாவுக்காக முக கவசம் அணிந்து இருந்ததால் தனது பேச்சு தவறாக புரிந்து கொள்ளப்பட்டது என்று துரைமுருகன் அப்போது விளக்கமும் அளித்தார்.

அண்மையில் நகர்ப்புற உள்ளாட்சித் துறை அமைச்சர் கே என் நேரு மதுரையில் செய்தியாளர்களிடம் பேசும்போது, மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை தொடர்பாகக் கேட்ட ஒரு கேள்விக்கு, மதுரை நாடாளுமன்றத் தொகுதி மார்க்சிஸ்ட் எம்பி வெங்கடேசனை பொதுவெளியில் ஒருமையில் பேசியதாக ஒரு பெரும் சர்ச்சை வெடித்தது.இது தொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களிலும் வைரலானது. இதனால் அவருடைய பேச்சுக்கு பல்வேறு தரப்பினரும் கண்டனம் தெரிவித்தனர்.

மார்க்சிஸ்ட் தலைமையும் கடும் எதிர்ப்பு தெரிவித்தது. இதைத்தொடர்ந்து அமைச்சர் நேரு, தனது ட்விட்டர் பதிவில் “நாடாளுமன்ற உறுப்பினர் வெங்கடேசன் அவர்களை ஒருமையில் குறிப்பிட்டது மன வருத்தத்தை ஏற்படுத்தியிருந்தால் பொறுத்தருள்க. இனிமேல் அவ்வாறு நிகழாமல் பார்த்துக்கொள்கிறேன்”என்று பதிவிட்டிருந்தார்.

அண்மையில் அமைச்சர் அன்பில் மகேஷ் வெள்ள பாதிப்புகளை ஆய்வு செய்ய சென்ற போது விவசாயி ஒருவர் “வெள்ள பாதிப்புகளை வயல்வெளிக்குள் இறங்கிப் பாருங்கள். அப்போதுதான் சேதம் முழுமையாக தெரியும்” என்று கேட்டுக் கொண்டார். அப்போது அன்பில் மகேஷ், “ஏய்… அங்கிட்டு போய்யா!” என ஒருமையில் அந்த விவசாயிடம் பேசினார். இதன் பின் அவர் வருத்தமும் தெரிவித்தார்.

இதே போல விழுப்புரத்தில் பஸ்சில் ஏறி ஆய்வு மேற்கொண்ட அமைச்சர் மா.சுப்பிரமணியன் கொரோனா தற்காப்புக்காக உபயோகிக்கும் முக கவசம் அணியாமல் இருந்தார். அதுமட்டுமின்றி முக கவசம் அணியாத நிலையிலேயே பயணிகளிடம் கொரோனா தடுப்பூசி குறித்து கலந்துரையாடவும் செய்தார். இதற்காக அவர் வருத்தமும் தெரிவித்தார்.

தற்போது மீண்டும் ஒரு அமைச்சர், பாஜக தலைவர் அண்ணாமலையை ஒருமையில் பேசியுள்ளது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூர் அடுத்த கெலவரப்பள்ளி நீர்தேக்க அணை அருகே உள்ள இலங்கைத் தமிழர் அகதிகள் முகாமில் அரசு சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைப்பெற்றது. இதில் கைத்தறி மற்றும் துணிநூல்த்துறை அமைச்சர் காந்தி பங்கேற்று உதவிகளை வழங்கினார்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் காந்தியிடம், கருத்து சுதந்திரம் திமுக ஆட்சியில் தடுக்கப்படுவதாக அண்ணாமலை குறிப்பிட்டது குறித்து பத்திரிகையாளர் கேட்டதற்கு, அவனெல்லாம் ஒரு தலைவனா அவனை பற்றி எல்லாம் நீ கேட்கலாமா?? வாய்க்கு வந்ததையெல்லாம் பேசும் அவன் படித்தவனை போல பேச வேண்டாமா, பதவி என்பது சில காலம் தான், மத்தியில் ஆட்சியில் இருப்பதால் தைரியமாக பேசி வருகிறான் என விமர்சித்தார்.

இப்படி ஒவ்வொரு அமைச்சரும் தேவையில்லாமல் ஒருமையில் பேசி வருத்தம் தெரிவித்து வருகின்றனர். எல்லோரையும் சமமாக பாவிக்கவேண்டும், மனிதர்கள் யாரையும் குறைத்து மதிப்பிடக் கூடாது. யாரையும் காயப்படுத்தக்கூடாது என்றால் ஒருமையாக பேச வாய்ப்பே இல்லை. ஆனால் பதவி வந்த பிறகு இப்படி பவுசு காட்டிக் கொள்ளும் அமைச்சர்களிடம் வாய் திறக்கவே பயமாக உள்ளதாக பலர் வேதனை தெரிவித்து வருகின்றனர்.

Views: - 366

0

0