பாஜகவில் இணைந்த திமுக எம்பி திருச்சி சிவாவின் மகன் கைது : பேருந்து கடத்தல், பணம் கேட்டு மிரட்டியதாக புகார்… பாஜகவினர் தர்ணா!!

Author: Udayachandran RadhaKrishnan
23 June 2022, 6:30 pm
Suriya Shiva Arrest -Updatenews360
Quick Share

திருச்சி : திமுக மாநிலங்களவை உறுப்பினர் திருச்சி சிவா மகன் சூர்யா சிவாவை கண்டோன்மென்ட் காவல்துறையினர் கைது செய்தனர்.

கள்ளக்குறிச்சி மாவட்டம் திருநாவலூர் பகுதியில் கடந்த 11-ந் தேதி இரவு நடைபெற்ற விபத்து தொடர்பாக பாஜக ஓபிசி மாநில பொதுச்செயலாளர் சூர்யா சிவா(எம்.பி.சிவா மகன்) திருநாவலூர் காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார். அந்த புகார் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என கூறப்படுகிறது.

இது தொடர்பாக சற்று நேரத்திற்கு முன்பு திருச்சியில் செய்தியாளர்களை சந்தித்து இந்த வழக்கு தொடர்பாக தன்னை தமிழக உயர்கல்வித்துறை அமைச்சர் மற்றும் பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் மிரட்டி வருவதாகவும், தன்னை கைது செய்ய போலீசார் முடிவு செய்திருப்பதாகவும் தனது புகார் மீது நடவடிக்கை எடுக்காமல் புதிய புகாரின் பேரில் தன்னை காவல்துறையினர் கைது செய்ய முனைந்து இருப்பது கண்டிக்கதக்கது என தெரிவித்தார்.

இந்நிலையில் சூர்யா சிவா கைது செய்யப்பட்டு கண்டோன்மென்ட் காவல் நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டார். இதுகுறித்து தகவலறிந்த பாரதிய ஜனதா கட்சியின் மாவட்ட தலைவர் ராஜசேகர் தலைமையில் கட்சியினர் 20க்கும் மேற்பட்டோர் கண்டோன்மென்ட் காவல் நிலைய முன்பு அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த வழக்கில் சூர்யா மீது அளிக்கப்பட்ட புகாரில், தனது கார் மீது தனியார் பேருந்து மோதியதால் சேதமடைந்ததாக கூறி தனியார் நிறுவனத்தின் வேறு ஒரு பேருந்தை கடத்தி சென்றதாகவும் அத்துடன் பேருந்து உரிமையாளரை ரூ 5 லட்சம் கேட்டு மிரட்டியதாகவும் கூறப்பட்டுள்ளது.

மேலும் பாஜகவினர் தர்ணாவில் ஈடுபட்டுள்ளதால் அசம்பாவிதங்கள் ஏற்படாத வகையில் அப்பகுதியில் காவல்துறையினர் குவிக்கப்பட்டு உள்ளனர்.

Views: - 432

0

0