அரசு இடத்தை வளைத்து போட்ட திமுக பிரமுகர் : சாலை போட வந்த அதிகாரிகளுக்கு மிரட்டல்… கம்பி எண்ணும் கணவன், மனைவி!!

Author: Udayachandran RadhaKrishnan
16 June 2022, 6:18 pm
Dmk Executive Arrest - Updatenews360
Quick Share

திருவாரூர் மாவட்டம் குடவாசல் ஒன்றியத்திற்கு உட்பட்ட செருகளத்தூர் ஊராட்சியில் உள்ள சித்தாடி ஸ்டாலின் நகரில் 600 மீட்டர் தார்சாலை அமைப்பதற்கு  9.50 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கடந்த ஜனவரி மாதம் டெண்டர் விடப்பட்டது.

அதை தொடர்ந்து கடந்த 3 மாதங்களுக்கு முன்பு சாலை போடும் பணியை ஒப்பந்தகாரர் தொடங்கியுள்ளார்.  அப்போது அதே பகுதியில் வசிக்கும் சித்தாடி திமுக கிளை செயலாளரான உலகநாதன் குடும்பத்தினர் இந்த சாலை அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து வாக்குவாதத்தில்  ஈடுபட்டுள்ளனர்.

உலகநாதன் குடும்பத்தினர் சாலையை ஆக்கிரமித்து வேலி வைத்துள்ளதாக கூறப்படுகிறது. அதனை அகற்றுமாறு அதிகாரிகள் கூறியதால் வாக்குவாதம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

இதனையடுத்து மூன்று மாதங்கள் கழித்து தற்போது சர்ச்சைக்குரிய அந்த இடத்தை விட்டு விட்டு சாலைப் பணியினை அதிகாரிகள் தொடங்கியுள்ளனர். 

அப்போது உலகநாதன் மற்றும் குடவாசல் ஒன்றிய திமுக மகளிரணி தலைவியான அவரது மனைவி ஜெசி ப்ளோரா ஆகியோர் அரசு ஊழியர்களிடம் கடுமையான வாக்குவாதத்தில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.

இதனையடுத்து குடவாசல் வட்டார வளர்ச்சி அலுவலர் பாஸ்கர் அரசு ஊழியர்களை பணி செய்ய விடாமல் தடுத்ததாக கூறி குடவாசல் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

அதன் அடிப்படையில் காவல்துறையினர் கொலை மிரட்டல், தகாத வார்த்தைகளில் திட்டுதல், அத்துமீறி நுழைதல்,அரசு ஊழியர்களை பணி செய்ய விடாமல் தடுத்தல் உள்ளிட்ட 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து இருவரையும் கைது செய்து உலகநாதனை நன்னிலம் கிளை சிறையிலும்,ஜெசி ப்ளோராவை திருவாரூர் மகளிர் கிளை சிறையிலும் அடைத்துள்ளனர்.

சாலை பணிகளை துரிதப்படுத்த அரசு உத்தரவிட்டுள்ள நிலையில் ஆளுங்கட்சி பிரமுகர்களே அதை தடுத்துள்ள சம்பவம் பொதுமக்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. இவர்களை போன்ற கட்சி நிர்வாகிகளால் ஆளும்கட்சிக்குத்தான் கெட்ட பெயர் என்று பொதுமக்கள் புலம்பி வருகின்றனர்.

Views: - 374

0

0