தேர்தலில் போட்டியிட வாய்ப்பு தர மறுத்த ஸ்டாலின்… அமைச்சர் செந்தில் பாலாஜியை முற்றுகையிட்ட தி.மு.க.வினர்

Author: kavin kumar
5 February 2022, 9:58 pm
Quick Share

கோவை : தேர்தலில் போட்டியிட பலருக்கு வாய்ப்பு மறுத்ததால் அதிருப்தியில் ஆளும் கட்சியினரே அமைச்சரின் காரை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

உள்ளாட்சித் தேர்தலில் பொள்ளாச்சி, வால்பாறை ஆகிய இரு நகராட்சிகள், 8 பேரூராட்சிகள் ஆகியவற்றில் தி.மு.க. சார்பில் போட்டியிடும் வேட்பாளர் அறிமுக கூட்டம் பொள்ளாச்சி பல்லடம் ரோட்டில் உள்ள ஒரு தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு தலைமை ஏற்ற மின்சாரம் மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறை அமைச்சர் செந்தில் பாலாஜி, உள்ளாட்சித் தேர்தலில் வெற்றி பெற வாக்கு சேகரிப்புகள் குறித்தும், தேர்தல் பணி குறித்தும் பேசினார். தொடர்ந்து வேட்பாளர்களையும் அறிமுகம் செய்து வைத்தார்.

இந்நிகழ்ச்சி முடிந்து வெளியே வந்து அமைச்சர் காரில் ஏறி புறப்பட முயன்றபோது, தேர்தலில் போட்டியிட வாய்ப்பு மறுக்கப்பட்ட அதிருப்தி தி.மு.க.வினர் ஏராளமானோர் காரை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுப்பட்டனர். மேலும் ஏராளமான பெண்கள் காருக்கு முன்பாக தரையில் போராட்டத்தில் ஈடுப்பட்டனர்.

கட்சிக்காக பல ஆண்டுகளாக பாடுபட்டவர்களுக்கு வாய்ப்பு வழங்காமல், உள்ளூர் நிர்வாகிகள் தன்னிச்சையாக செயல்பட்டுள்ளதாகவும், உள்ளூர் நிர்வாகிகள் மீது எதிர்ப்பு தெரிவித்து கோஷங்களை எழுப்பினர். நீண்ட நேரம் நடைபெற்ற இந்த முற்றுகைப் போராட்டத்தால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது. நீண்டநேர இழுபறிக்குப் பிறகு கட்சிக்காரர்கள் பெண்களை குண்டுகட்டாக தூக்கி அப்புறப்படுத்தி, அமைச்சர் கார் செல்ல வழி ஏற்படுத்தினர்.

Views: - 1059

0

0