கோவையில் 3 நாட்களில் கொரோனா தடுப்பூசி செலுத்திய முன்களபணியாளர்கள் எவ்வளவு தெரியுமா?
19 January 2021, 3:36 pmகோவை : கோவையில் நேற்று மாலை நிலவரப்படி 1200 முன் களப்பணியாளர்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டிருக்க வேண்டும், ஆனால், 477 பேர் மட்டுமே கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டுள்ளதாக சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
உலகம் முழுவதும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி வந்த கொரோனா தொற்றுக்கு தடுப்பு மருந்து கண்டுபிடிக்கப்பட்டு நாடு முழுவதும் கடந்த 16ம் தேதி முதல் முன் களப்பணியாளகளுக்கு செலுத்தப்படுகிறது.
கோவையை பொறுத்தவரை கொரோனா தடுப்பூசி முகாமை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி கோவை அரசு மருத்துவமனையில் அன்றைய தினமே துவக்கி வைத்தார். இதனை தொடர்ந்து, கோவையில் உள்ள மருத்துவர்கள், செவிலியர்கள், தூய்மை பணியாளர்கள் உள்ளிட்டோருக்கு கொரோனா தடுப்பூர்சி செலுத்தப்பட்டு வருகிறது.
மாவட்டத்தில் கோவை அரசு மருத்துவமனை, பொள்ளாச்சி மற்றும் மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனைகள் மற்றும் நல்லட்டிபாளையம் ஆரம்ப சுகாதார நிலையம் ஆகிய 4 மையங்களில் இந்த ஊசி செலுத்தப்பட்டு வருகிறது. ஒரு முகாமிற்கு 100 பேர் வீதம் நாள் ஒன்றுக்கு 400 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்படும் என்று அறிவுறுத்தப்பட்டிருந்தது.
ஆனால், முதல் நாளான 16ம் தேதி வெறும் 72 பேர் மட்டுமே இந்த தடுப்பூசியை போட்டுக்கொண்டனர். தடுப்பூசி குறித்த புரிதல் இல்லாமல் அச்சத்துடன் பலரும் இந்த ஊசியை போட்டுக்கொள்ள முன்வரவில்லை.
அதன்படி, 3 நாட்களில் 1200 பேர் இந்த தடுப்பூசியை போட்டிருக்க வேண்டும். ஆனால், நேற்று மாலை நிலவரப்படி 477 முன் களப்பணியாளர்கள் மட்டுமே தடுப்பூசியை போட்டுக்கொள்ள முன்வந்துள்ளனர்.
அரசு மற்றும் இ.எஸ்.ஐ மருத்துவமனை முதல்வர்களும் , மருத்துவ உயர் அதிகாரிகளும் இந்த தடுப்பூசியை போட்டுக்கொண்ட போதிலும், பல முன் களப்பணியாளர்கள் தடுப்பூசி போட்டுக்கொள்ள முன் வரவில்லை. அரசு தடுப்பூசி குறித்து இன்னும் விழிப்புணர்வை ஏற்படுத்தி அச்சத்தை களைய வேண்டும் என்று மருத்துவர்கள் தெரிவித்தனர்.
0
0