கர்ப்பிணியை அழைத்து வர பரிசலில் சென்ற மருத்துவர்கள்: 108 ஆம்புலன்சில் சுகப்பிரசவம்!!

Author: Udhayakumar Raman
20 September 2021, 9:34 pm
Quick Share

கோவை: மேட்டுப்பாளையம் அருகே மருத்துவமனைக்கு அழைத்து வரப்பட்ட மலைவாழ் பெண்ணுக்கு, 108 ஆம்புலன்சில் சுகப்பிரசவம் ஆனது.

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே காந்தவயல் அருகே உள்ளது மேலூர் மலைவாழ் கிராமம். இந்த கிராமத்திற்கு பவானி ஆற்றை கடந்து பரிசல் மூலமாகவும், காட்டு வழிபாதை வழியாகவும் செல்லலாம். பரிசல் மூலம் ஆற்றை கடந்தால் 2 கி.மீ தூரமும், காட்டுப்பாதை வழியாக வாகனத்தில் சென்றால் 5 கி.மீ ஆகும். மேலூர் கிராமத்தை சேர்ந்தவர் மாரி. கூலித்தொழிலாளி. இவரது மனைவி தீபா. தீபா நிறைமாத கர்ப்பிணியாக இருந்தார். இன்று அவருக்கு திடீரென பிரசவ வலி ஏற்பட்டு வலியால் துடித்தார். இதையடுத்து அவரது கணவர் மாரி 108 ஆம்புலன்சுக்கு தகவல் தெரிவித்தார். உடனடியாக மேட்டுப்பாளையத்தில் இருந்து 2 ஆம்புலன் சுகளில் பைலட்கள் நந்தகோபால், சுகுமாறன், அருண்குமார், மருத்துவ பணியாளர்கள் அஜித், விஜய், மேரி ஆகியோர் ஆம்புலன்சில் சம்பவ இடத்திற்கு புறப்பட்டனர்.

ஒரு குழுவினர் மருத்துவ உபகரணங்களுடன் லிங்காபுரம் சோதனை சாவடியில் இறங்கி பரிசல் மூலம் ஆற்றை கடந்தும், மற்றொரு குழுவினர் ஆம்புலன்சில் காட்டுப்பாதை வழியாக மேலூர் கிராமத்திற்கு சென்றனர். அங்கு சென்றதும் தீபாவை மீட்டு ஆம்புலன்சில் ஏற்றி கொண்டு புறப்பட தயாராகினர். ஆம்புலன்சில் ஏற்றிய சிறிது நேரத்திலேயே தீபாவுக்கு ஆண் குழந்தை பிறந்தது. இதையடுத்து மருத்துவ பணியாளர்களில் ஒரு குழுவினர் தீபாவை ஆம்புலன்ஸ் மூலம் மேட்டுப்பாளையம் அரசு ஆஸ்பத்திரிக்கும், மற்றொரு குழுவினர் குழந்தையை தூக்கி கொண்டு பரிசல் மூலம் ஆற்றை கடந்து வந்து சிறுமுகை ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு தாய், சேய் இருவரும் நலமாக இருப்பதாக டாக்டர்கள் தெரிவித்தனர்.

Views: - 198

0

0