275 சவரன் வரதட்சணை கொடுத்தும் ‘பெண் கொலை‘ : நகை, பணத்தை ‘ஏப்பம்‘ விட்ட கணவர் குடும்பத்தார்!!

26 September 2020, 4:12 pm
Dwory Murder - updatenews360
Quick Share

மதுரை : சிவகாசியில் வரதட்சணை கேட்டு கொலை செய்துள்ளதாக உயிரிழந்த பெண்ணின் பெற்றோர் காவல்துறை புகார் அளித்துள்ளனர்.

மதுரை கருப்பாயூரணியை சேர்ந்த ஆறுமுகச்சாமி என்பவரது மகள் கவிநிலாவிற்கும் சிவகாசியில் உள்ள பிரபல பேக்கரி கடையின் உரிமையாளர் ஜெயச்சந்திரன் மகன் துளசி ராமிற்கும் கடந்த 2016ம் ஆண்டு திருமணம் நடந்துள்ளது.

திருமணத்தின்போது 230 சவரன் நகை வழங்கியதுடன் சீமந்தம் உள்ளிட்ட நிகழ்வின்போது 45 சவரன் நகையும் வரதட்சணை வழங்கியுள்ளனர். இந்த தம்பதிக்கு 2 வயதில் ஆண் குழந்தையும் 9 மாத பெண் குழந்தையும் உள்ள நிலையில் கணவர் துளசி ராம் தொடர்ந்து மனைவி கவி நிலாவை துன்புறுத்தி வந்ததாக கூறப்படுகிறது.

இதனால் மன உளைச்சலுக்கு ஆளாகி கடந்த சில மாதங்களுக்கு முன்பு சில மாதங்கள் கவி நிலா தனது பெற்றோர் வீட்டிற்கு வந்துவிட்டு கணவர் வீட்டிற்கு செல்லாமல் இருந்து வந்ததாகவும் பின்னர் கடந்த மாதம் கவிநிலாவின் பெற்றோர் வரதட்சணையாக 45 லட்சம் ரூபாய் பணத்தை இன்னும் சில மாதங்களுக்குள் வழங்குவதாக உறுத்தியளித்து தனது மகளை அழைத்து சிவகாசியில் உள்ள கணவர் வீட்டில் விட்டுவிட்டு வந்துள்ளனர்.

இந்நிலையில் நேற்று முன்தினம் (22ம் தேதி)கவி நிலா தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக போன் மூலம் பெற்றோருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதை தொடர்ந்து பெற்றோர் அங்கு சென்று பார்த்தபோது வீட்டிற்கு வெளியே நிறுத்தி வைக்கப்பட்டிருந்த காரில் உயிரிழந்த நிலையில் கவி நிலாவின் உடல் வைக்கப்பட்டிருந்துள்ளது.

மேலும் வீட்டிற்குள் தூக்கிட்டு இறந்ததற்கான எந்தவித தடயமும் இல்லை எனவும் தனது மகளின் கழுத்தில் காயமும் இல்லாத நிலையில் தனது மகளின் உடலை காரில் வைக்கப்பட்டுள்ளது போன்ற பல்வேறு மர்மங்கள் உள்ளதால் சந்தேகமடைந்த பெண்ணின் பெற்றோர் தனது மகளின் இறப்பில் சந்தேகம் இருப்பதாகவும் வரதட்சணை கேட்டு கொடுமை செய்து கொலை செய்யப்பட்டு பின்னர் தற்கொலை செய்து கொண்டதாக மகளின் கணவர் மற்றும் அவரது பெற்றோர் நாடகமாடுவதாக பெற்றோர் குற்றம் சாட்டியுள்ளனர்.

மகள் இறப்பிற்கு உரிய நீதி விசாரணை நடத்த வேண்டும் என சிவகாசி நகர் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இது குறித்து காவல்துறை தரப்பில் சந்தேக மரணம் என்ற அடிப்படையில் வழக்குப்பதிவு செய்து விசாரணையும் வருவாய்க்கோட்டாட்சியர் விசாரணையும் நடைபெற்று வருகிறது.

இதனிடையே காவல்துறையினர் கொலை வழக்குப்பதிவு செய்து மகன் துளசி ராம் மற்றும் அவரது பெற்றோரை கைது செய்ய வேண்டும் எனவும் வருவாய்க் கோட்டாட்சியர் நியாயமான முறையில் விசாரணை நடத்த வேண்டும் எனவும் பெற்றோர் கண்ணீர் மல்க கோரிக்கை விடுத்துள்ளனர். இது குறித்து சிவகாசி வருவாய்க்கோட்டாட்சியர் தினேஷ் குமாரிடம் கேட்டபோது நியாயமான முறையில் விசாரணை நடத்தி வருவதாக தெரிவித்துள்ளார்.