மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கைவரிசை…!! பகுதிநேர ஓவிய ஆசிரியர் கைது..!
Author: kavin kumar13 January 2022, 10:47 pm
திருப்பூர் : திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருக்கும் இருசக்கர வாகனங்களை திருடிய பகுதிநேர ஓவிய ஆசிரியர் கைது செய்யப்பட்டுள்ளார். சிசிடிவி காட்சிகளை கொண்டு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருப்பூர் மாவட்டம் உடுமலைபேட்டையை சேர்ந்தவர் செந்தில்குமார் (40). இவர் திருப்பூர் கே.எஸ்.சி அரசு மேல்நிலைப்பள்ளியில் பகுதி நேர ஓவிய ஆசிரியராக 8 ஆண்டிற்கும் மேலாக பணியாற்றி வந்தார். இந்த நிலையில் பள்ளி வேலை தொடர்பாக திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள முதன்மைக் கல்வி அலுவலகம், மாவட்ட கல்வி அலுவலகம் உள்ளிட்ட இடங்களுக்கு வழக்கமாக வந்து செல்வார். அப்படி வந்து செல்லும் போது ஆட்சியர் அலுவலகத்தில் நிறுத்தப்பட்டிருக்கும் வாகனங்களை திருடுவதை வாடிக்கையாக வைத்துள்ளார். இந்த நிலையில் நேற்று வழக்கம் போல் அலுவலக பணிக்காக ஆட்சியர் அலுவலகத்துக்கு காரில் வந்துள்ளார். அதன்பின்னர் குறைதீர் கூட்ட அரங்குக்கு வெளியே நிறுத்தப்பட்ட இருசக்கர வாகனத்தை எடுத்து சென்றார்.
தொடர்ந்து பொங்கலை ஒட்டி கூட்டம் அதிகம் இருக்கும் என்பதால் ஊத்துக்குளி சாலையில் உள்ள எஸ்.பி.ஐ வங்கியின் பிரதான கிளை முன்பு நிறுத்தப்பட்டிருந்த மற்றொரு வாகனத்தையும் திருடிச் சென்று தான் பணியாற்றும் பள்ளி வளாகத்தில் நிறுத்தி வைத்துள்ளார். இந்த நிலையில் நேற்று ஆட்சியர் அலுவலகத்தில் திருடிய வாகனத்தை இன்று குமரன் சாலையில் உள்ள பேக்கரி முன்பு நிறுத்தி உள்ளார். இதனை அங்கிருந்த வடக்கு வருவாய் ஆய்வாளர் சக்திவேல் பார்த்துள்ளார். வாகனத்தின் எண்ணை பார்த்தபோது, நேற்று தொலைந்து போன தனது நண்பரின் வாகனம் என்பது தெரியவந்தது. இதையடுத்து செந்தில்குமார் வாகனத்தை அங்கிருந்து எடுத்து செல்ல முற்பட்டபோது, அவரை கையும், களவுமாக பிடித்து விசாரித்தார்.
அதில் அவர் முன்னுக்கு பின் முரணாக பேச, வடக்கு போலீஸாருக்கு தகவல் அளித்தார். இதையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் செந்தில்குமார் இடம் விசாரணை நடத்தினர். அதில் வாகனங்களை திருடியதை ஒப்புக்கொண்டார். ஆட்சியர் அலுவலகத்துக்கு வரும்போது, பல்வேறு நாட்களில் வாகனங்களை குறிவைத்து திருடியது போலீஸாரின் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. மேலும் திருடிய வாகனங்களை பள்ளி வளாகத்தில் பாதுகாப்பாக வைத்துக்கொண்டு, நண்பர்கள் வாகனம் என்று சொல்லி சமாளித்து வந்துள்ளார். பகுதி நேர ஆசிரியர் என்பதால் யாருக்கும் எவ்வித சந்தேகமும் எழவில்லை. போலீஸார் விசாரணையில், இவர் ஆட்சியர் அலுவலகத்தில் வாகனங்கள் திருடும் சிசிடிவி காட்சிகளை போலீஸார் கைப்பற்றி விசாரணையை தீவிரப்படுத்தி உள்ளனர். இது தொடர்பாக வீரபாண்டி மற்றும் வடக்கு போலீஸார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.
0
0