ஒட்டகப்பாலில் மில்க் ஷேக் கேட்டு போதை ஆசாமிகள் ரகளை : கடையை சூறையாடிய காட்சி!!

5 November 2020, 2:11 pm
CCTV - Updatenews360
Quick Share

புதுச்சேரி : அரியாங்குப்பத்தில் உள்ள பேக்கரியில் ஒட்டகப்பாலில் மில்க் ஷேக் இல்லை என்று கூறியதால் கஞ்சா போதையில் பேக்கரியை சூறையாடி ஊழியர்களை தாக்கிய 3 இளைஞர்களை போலிசார் கைது செய்தனர். இதன் சிசிடிவி காட்சி வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

புதுச்சேரி அடுத்த அரியாங்குப்பம் பகுதியை சேர்ந்தவர் மதிமுக பிரமுகர் செல்வராஜ். இவரது மருமகன் நாராயணன். இவர் அரியாங்குப்பம் பைபாஸ் பகுதியில் பேக்கிரி மற்றும் டீக்கடை நடத்தி வருகிறார்.

இவரது கடைக்கு நேற்றிரவு வந்த 3 பேர் கொண்ட கும்பல், ஒட்டகப்பாலில் மில்க் ஷேக் கேட்டுள்ளனர். ஒட்டகம் பால் இல்லை என்று ஊழியர்கள் தெரிவித்துள்ளனர். ஏன் இல்லை என்று வாக்குவாதத்தில் ஈடுபட்ட அந்த 3 பேரும் திடீரென ஆத்திரமடைந்து கடையை சூறையாடினர்.

அப்போது அவர்களை தடுக்க முயன்ற ஊழியர்களையும் தாக்கினர். பதிலுக்கு கடை ஊழியர்கள் தாக்க முயன்றபோது 3 பேரும் தப்பிச்சென்றனர். இந்த சம்பவம் குறித்து அரியாங்குப்பம் காவல்நிலையத்தில் நாராயணன் புகார் தெரிவித்தார்.

இதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில் வேல்ராம்பட்டு பகுதியை சேர்ந்த கோகுல், உதயா, முருகவேல் ஆகியோர் கஞ்சா போதையில் கடையை சூறையாடி இருப்பது தெரிய வந்தது.

இதையடுத்து முருங்கப்பாக்கம் பகுதியில் இருந்த 3 பேரையும் அரியாங்குப்பம் போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கடையை சூறையாடும் சிசிடிவி காட்சி வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Views: - 27

0

0