நாங்க இருக்கோம்; தைரியமாக இருங்கள்- அஜித்குமாரின் குடும்பத்திற்கு எடப்பாடி பழனிசாமி தொலைப்பேசியில் ஆறுதல்
Author: Prasad2 July 2025, 3:09 pm
திருட்டு வழக்கு தொடர்பாக திருப்புவனம் மடப்புரம் காளியம்மன் கோவிலின் தற்காலிக காவலாளியான இளைஞர் அஜித்குமாரை விசாரணைக்காக போலீஸார் அழைத்துச் சென்ற நிலையில் அவரை அடித்து கொலை செய்த சம்பவம் தமிழகம் முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இச்சம்பவத்தை தொடர்ந்து 5 போலீஸார் மீது கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. போலீஸார் அஜித்குமாரை அடித்தது தொடர்பான வீடியோ காட்சிகளும் வெளியாகி அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

இச்சம்பவத்திற்கு பலரும் கண்டனம் தெரிவித்து வரும் நிலையில் எதிர்கட்சிகள் பலரும் திமுக அரசை விமர்சனம் செய்து வருகின்றனர். மேலும் அஜித்குமாரின் குடும்பத்திற்கு முதல்வர் முக ஸ்டாலின், திருமாவளவன் உட்பட பலரும் ஆறுதல் கூறி வருகின்றனர். மேலும் அஜித்குமாரின் தம்பிக்கு அரசு பணியும் நியமனம் செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில் அதிமுக பொதுச்செயலாளரும் எதிர்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி, அஜித்குமாரின் குடும்பத்திற்கு தொலைப்பேசி மூலம் ஆறுதல் கூறியுள்ள வீடியோ வெளிவந்துள்ளது.
அதில், “துர்திஷ்டவசமாக மனித மிருகங்கள் கடுமையாக தாக்கியதால் அஜித்குமார் மரணமடைந்துள்ளார். தைரியமாக இருங்கள். உங்களுக்கு நீதி கிடைக்கும் வகையில் அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் உங்களுக்கு துணை நிற்கும். ஒரு தாய் தன்னுடைய மகனை இழப்பது என்பது கொடுமையான விஷயம். எவ்வளவு ஆறுதல் சொன்னாலும் ஈடாகாது. மனம் தளராது இருங்கள்.
அதிமுக சார்பாக நீதிமன்றத்தில் வழக்கு கொடுத்திருக்கிறோம். நீதி நிலைநாட்டப்படும். உங்களுக்கு நியாயம் கிடைக்கும்” என ஆறுதல் கூறியுள்ளார். வீடியோ இதோ…
மனம் தளராமல் இருங்கள் என அஜித்குமார் குடும்பத்திற்கு கழக பொதுச் செயலாளர் @EPSTamilNadu ஆறுதல் கூறினார். #JusticeForAjithkumar#Sorry_தெரியாம_கொன்னுட்டோம் pic.twitter.com/AQgxw9O4ym
— Hemand Kumar (@HemanthVLR) July 2, 2025