திமுக பாஜகவுடன் கூட்டணி வைத்தால் சரி, நாங்கள் வைத்தால் தவறா? கொதித்தெழுந்த எடப்பாடி பழனிசாமி!
Author: Prasad7 July 2025, 7:59 pm
வருகிற 2026 ஆம் ஆண்டில் தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் நடைபெறவுள்ளதையொட்டி “மக்களைக் காப்போம், தமிழகத்தை மீட்போம்” என்ற பெயரில் தேர்தல் சுற்றுப்பயணத்தை இன்று தொடங்கியுள்ளார் அதிமுக பொதுச்செயலாளரும் எதிர்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி.
இன்று கோவை மாவட்டத்தில் தனது சுற்றுப்பயணத்தை தொடங்கிய நிலையில் எடப்பாடி பழனிசாமியுடன் தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன், வானதி சீனிவாசன் ஆகியோரும் கலந்துகொண்டனர்.

அப்போது மேட்டுப்பாளையம் பகுதியில் தனது பிரச்சார வாகனத்தில் நின்றுகொண்டு மக்களின் மத்தியில் பேசிய எடப்பாடி பழனிசாமி, “திமுக எனும் தீய சக்தி வரும் தேர்தலில் அகற்றப்பட வேண்டும். தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு சந்தி சிரிக்கிறது. அஜித்குமார் என்ற இளைஞரை கொடுமையாக தாக்கி கொன்றுள்ளனர்” என சாடினார்.
மேலும் பேசிய அவர், “அதிமுக-பாஜக கூட்டணி இமாலய வெற்றி பெறும். பாஜகவுடன் திமுக கூட்டணி வைத்தால் சரி, அதிமுக வைத்தால் தவறா?” என்று கேள்வி எழுப்பியுள்ளார்.