‘கொங்குநாட்டு முதல்வரே’ ஈஸ்வரனை புகழ்ந்து ஒட்டப்பட்ட போஸ்டர்… கடுப்பில் திமுக உள்ளிட்ட கூட்டணி கட்சிகள்…!!

16 July 2021, 8:49 pm
Quick Share

கோவை: கோவையில் கொங்கு நாட்டு முதல்வரே என கொங்கு மக்கள் தேசிய கட்சியின் பொதுச் செயலாளர் ஈஸ்வரனுக்கு பட்டம் சூட்டி சுவர் விளம்பரம் செய்யப்பட்டுள்ள சம்பவம் திமுகவினரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மத்திய இணை அமைச்சராக எல். முருகன் பதவியேற்ற நாளில் மத்திய அரசு வெளியிட்ட செய்திக் குறிப்பில் கொங்கு நாடு என குறிப்பிடப்பட்டிருந்தது. இதுதான் சர்ச்சைகளின் தொடக்கமானது. இதனைத் தொடர்ந்து பாஜக தலைவர்கள் கொங்கு நாடு தனி மாநில கோரிக்கையை ஆதரித்து வருகின்றனர். பாஜகவின் சில மாவட்டங்களிலும் கொங்கு நாடு தனி மாநிலம் கோரி தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டு வருகின்றன.ஆனால் கொங்கு நாடு தனி மாநில கோரிக்கைக்கு தமிழக அரசியல் கட்சித் தலைவர்கள் பெரும்பாலானோர் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். தமிழகத்தில் நடைபெறும் திமுக ஆட்சி, மத்திய அரசை ஒன்றிய அரசு எனக் குறிப்பிடுகிறது.

இதற்கு பதிலடி தரும் வகையில்தான் கொங்குநாடு தனி மாநில கோரிக்கையை நிறைவேற்றுவோம் என மறைமுகமாக மத்திய அரசு மிரட்டுகிறது என்கிற கருத்தையும் அரசியல் பார்வையாளர்கள் முன்வைத்து வருகின்றனர். இந்த நிலையில் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சித் தலைவர் ஈஸ்வரனுக்கு கொங்கு நாட்டு முதல்வரே என பட்டம் சூட்டி சுவர் எழுத்துகள் கோவை மாவட்ட பகுதிகளில் எழுதப்பட்டு வருகின்றன. இத்தனைக்கும் கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சி ஆளும் திமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ளது.அத்துடன் திமுகவின் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்டுதான் ஈஸ்வரன் வென்றார். அதனால் தி.மு.க. எம்.எல்.ஏ.வாகத்தான் கொங்கு ஈஸ்வரன் இருக்கிறார்.

ஆனால் அவரது கட்சியினரோ, கொங்கு நாட்டு முதல்வரே என பட்டம் கொடுத்து சுவர் எழுத்து எழுதி வருகின்றனர். ஈஸ்வரன் கட்சியின் இந்த போக்கு திமுகவினரை கடுமையாக அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. இது இதுகுறித்து ’’கோவை புறநகர் கிழக்கு மாவட்ட பொறுப்பாளர் சேனாதிபதி கூறுகையில், கொ.ம.தே.க-வினரின் இத்தகைய செயல் குறித்து கட்சி தலைமைக்கு தகவல் தெரிவிப்போம் எனவும், தலைமை இது குறித்து நடவடிக்கை எடுக்கும் எனவும் கூறியிருக்கிறார். மேலும் சுவர் விளம்பரம் செய்யப்பட்டிருக்கும் மதுக்கரை பகுதியின் ’’கொ.ம.தே.க செயலாளர் பாலு’’, 13 ஆண்டுகளாக பல்வேறு அடைமொழி கொடுத்து,

சுவர் விளம்பரம் எழுதுவதாகவும், பிளக்ஸ் பேனர் வைத்து, போஸ்டர் வைப்பதாகவும் கூறுகிறார். மேலும், அந்தந்த பகுதி நிர்வாகிகள் விருப்பத்துக்கேற்ப எழுதுவார்கள் எனவும், கொங்கு நாடு பற்றிய பிரச்னையில் கட்சி பொதுசெயளார் கருத்தே, எங்கள் கருத்து என்கிறார். கொங்குநாடு தனி மாநில கோரிக்கையை ஈஸ்வரன் வலியுறுத்தி வந்தாலும் தற்போதைய சூழ்நிலையில் பகிரங்கமாக கருத்து தெரிவிக்காமல் இருந்து வந்தார். தற்போது அவரது கட்சியினரின் கொங்கு நாட்டு முதல்வரே பட்டத்தால் திமுக கூட்டணியில் சலசலப்பு விதைக்கப்பட்டுள்ளது.

Views: - 165

0

0