கிணற்றில் தவறி விழுந்த யானை : மீட்கும் முயற்சியில் வனத்துறையினர்!!
19 November 2020, 10:01 amதர்மபுரி : பாலக்கோடு அருகே கிணற்றில் விழுந்த பெண் காட்டு யானையை மீட்கும் பணி தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
பாலக்கோடு அடுத்த பஞ்சப்பள்ளி ஏலகுண்டூர் கிராமத்தை சேர்ந்த வெங்கடாசலம் என்பவரின் விவசாய கிணற்றில் யானை பிளிருவதாக இன்று அதிகாலை சத்தம் கேட்டுள்ளது.
கிராம மக்கள் விவசாய கிணற்றில் பார்த்தபோது கிணற்றுக்குள் யானை இருந்ததை கண்டுபிடித்துள்ளனர். இது குறித்து பொதுமக்கள் பாலக்கோடு வனத்துறையினருக்கு தகவல் கொடுத்தனர்.
தகவல் அறிந்த வனத்துறையினர் கிணற்றில் உள்ள யானையை மீட்கும் பணியில் இன்று அதிகாலை முதல் ஈடுபட்டு வருகின்றனர். யானை பஞ்சப்பள்ளி காப்பு காட்டில் இருந்து வெளியேறி உணவு தேடி வந்தபோது இரவு நேரத்தில் அருகில் கிணறு இருந்ததை தெரியாமல் கிணற்றில் தவறி விழுந்துள்ளது .
12 வயது உள்ள பெண் யானை என்றும் தற்போது கிணற்றில் தண்ணீர் இல்லாததால் 50 அடி ஆழத்தில் யானை உள்ளதால் வனத்துறையினர் அருகே சாய்வாக பாதை அமைத்து மீட்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்