100 அடியை தாண்டிய பவானி.! மகிழ்ச்சியில் விவசாயிகள் பவனி.!!

10 August 2020, 10:11 am
Bhavani DAm - Updatenews360
Quick Share

ஈரோடு : நீர் பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் தொடர் மழை காரணமாக பவானிசாகர் அணையின் நீர்மட்டம் 100 அடியை தாண்டியது.

ஈரோடு மாவட்டத்தின் முக்கிய நீராதாரமாக விளங்கும் பவானிசாகர் அணையின் மூலம் ஈரோடு, திருப்பூர், கரூர் உள்ளிட்ட மாவட்டங்களில் உள்ள 2 லட்சத்து 47 ஆயிரம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. கடந்த சில நாட்களாக நீலகிரி மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது.

இதனால் பில்லூர் அணையில் இருந்து உபரி நீர் திறக்கப்பட்டு பவானிசாகர் அணைக்கு வரும் நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்து வந்தது. இதன் காரணமாக தற்போது பவானிசாகர் அணையின் நீர்மட்டம் படிப்படியாக உயர்ந்து தற்போது 100 அடியை தாண்டியது.

இன்று காலை 6 மணி நிலவரப்படி அணையின் நீர்மட்டம் 100.23 அடியாகவும் நீர் இருப்பு 28.9 டிஎம்சி ஆகவும் நீர்வரத்து வினாடிக்கு 5572 கன அடியாகவும் உள்ளது. அரக்கன்கோட்டை தடப்பள்ளி வாய்க்காலில் 500 கன அடி நீரும் காலிங்கராயன் வாய்க்கால் பாசனத்திற்கும் 500 கன அடி நீரும் என 1000 கன அடி நீர் வெளியேற்றம் செய்யப்பட்டு வருகிறது. பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்து 100 யை தாண்டி உள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.