சாலையை பார் ஆக்கி ‘குடி’மகன்கள் சேட்டை : திண்டாடும் குடியிருப்புவாசிகள்.. டாஸ்மாக்கை மாற்ற மக்கள் கோரிக்கை!!!

Author: Babu Lakshmanan
30 October 2021, 11:12 am
erode tasmac - updatenews360
Quick Share

ஈரோடு : மொடக்குறிச்சி அருகே குடியிருப்பு பகுதியில் இருக்கும் மதுபானக் கடையை அப்புறப்படுத்த வேண்டும் என்று தமிழக அரசுக்கு பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

மொடக்குறிச்சி அருகே உள்ள அவல்பூந்துறைக்கு செல்லும் வழியில் லட்சுமி நகர் இருக்கிறது. பொதுமக்களின் குடியிருப்பு பகுதியில் அரசின் மதுபானக் கடை செயல்பட்டு வருகிறது. இங்கு மது அருந்த வரும் மதுப்பிரியர்கள், சாலையிலேயே அமர்ந்து மதுக்குடித்து விட்டு, போதை தலைக்கேறிய நிலையில் அங்கேயே சிறுநீர் கழிப்பதும், தகாத வார்த்தைகளை பேசுவது போன்ற செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதனால், அந்த சாலை வழியாக பணிக்கு செல்லும் பெண்களும், பள்ளி, கல்லூரி மாணவிகள் முகம் சுழிக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. அதுமட்டுமில்லாமல், ஒருசில குடிமகன்கள், பெண்களைக் கேலி கிண்டல் செய்து மதுபாட்டில்களை உடைத்து அராஜகம் செய்தும் வருகின்றனர்.

எனவே, இப்பகுதியில் உள்ள மதுபானக்கடைய அகற்ற வேண்டும் என்று ஈரோடு மாவட்ட ஆட்சியர் முதல் முதல்வரின் தனிப்பிரிவு வரை, புகார் அளித்துள்ளனர். ஆனால், இதுவரை எந்தவிதநடவடிக்கையும் எடுக்காதது பொதுமக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

இது தொடர்பாக அப்பகுதியைச் சேர்ந்த சுமதி குணசேகரன் கூறியதாவது :- ஈரோடு மாவட்டம் மொடக்குறிச்சி கிராமம் அவல்பூந்துறை ஸ்ரீ லட்சுமி நகர் மிகுந்த குடியிருப்பு பகுதியில் அதிக மக்கள் நடமாட்டம் உள்ள பகுதியில் டாஸ்மார்க் மதுபானக்கடை மக்களின் மத்தியில் இந்த மதுபானக்கடையானது மிக ஜோராக வியாபாரம் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இங்கு மக்கள் நடமாட முடியாமல் குழந்தைகள் வீட்டை விட்டு வெளியே வர முடியாமல் மிகவும் தவிக்கின்றனர்.

இது மொடக்குறிச்சி அதிகாரிக்கு தெரிந்தும், அவர்களால் நடவடிக்கை எடுக்க முடியாமல் தவிக்கின்றனர். தினமும் காவல்துறைக்கு போன் மூலம் தகவல் தெரிவித்து, காவல்துறை அதிகாரி நேரில் பார் கடைக்கு வந்து இங்கு இருக்கும் நபர்களை தினமும் விரட்டுகின்றனர். இதை கண்டுகொள்ளாத அரசாங்கம் மக்களின் நலன் கருதி, இனி மேற்கொண்டு ஒரு வாரத்தில் நடவடிக்கை எடுக்கவில்லை எனில், சாலைமறியல் மற்றும் கடை முன்பு நின்று போராட்டம் உறுதியாக நடத்தப்படும். டாஸ்மாக் மேலாளர் துரித நடவடிக்கை எடுக்குமாறு தங்களை கேட்டுக்கொள்கிறோம்.

இல்லையெனில் நவம்பர் 5ஆம் தேதி கடையின் முன்பு மாபெரும் மக்கள் போராட்டம் நடைபெறும் என்று இதன் மூலம் தெரிவித்துக் கொள்கிறோம். நேர்மையான ஆட்சியர் மற்றும் நேர்மையான காவல்துறை அதிகாரி இருந்தும், மக்களுக்கு பயனுள்ளதாக இல்லையே என்பது மிகவும் வேதனை அளிக்கிறது. எனவே, துரித நடவடிக்கை எடுத்து மக்களின் கோரிக்கையை ஏற்று, இந்த மதுபானக் கடையை வேறு இடத்துக்கு மாற்றி மக்களுக்கு உதவுமாறு மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்களையும், காவல் கண்காணிப்பாளர் அவர்களையும் மிகத் தாழ்மையுடன் தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்,” எனக் குறிப்பிட்டுள்ளார்.

Views: - 379

0

0