தினமும் செந்தில் பாலாஜியை பார்க்கப் போகும் அமைச்சர்… அரசு மருத்துவமனையின் தரத்தை ஆய்வு செய்ய மறந்துட்டாரு.. ஜெயக்குமார் விமர்சனம்!!
Author: Babu Lakshmanan4 ஜூலை 2023, 8:19 மணி
தவறான சிகிச்சையின் காரணமாக அரசு மருத்துவமனைகளில் 2 ஆண்டுகளில் நிறைய பாதிப்புகள் ஏற்பட்டுள்ளதாக முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.
சென்னை எழும்பூரில் உள்ள குழந்தைகள் நல மருத்துவமனையில் சிகிச்சை வழங்கப்பட்ட குழந்தைக்கு கை அகற்றப்பட்ட நிலையில், குழந்தையை நேரில் பார்த்து அதிமுக முன்னாள் அமைச்சர்கள் விஜயபாஸ்கர் மற்றும் ஜெயக்குமார் ஆகியோர் நேரில் சந்தித்து ஆறுதல் கூறினர்.
முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர் சந்திப்பில் பேசியதாவது :- அதிமுக ஆட்சியில் தமிழகம் மருத்துவத்தில் சிறந்து விளங்கியது. தமிழகத்தில் சென்னை மருத்துவ தலைநகராக விளங்கியது. திமுகவின் இரண்டு ஆண்டு ஆட்சியில் மருத்துவ துறை மோசமாக உள்ளது.
மருத்துவத்துறைக்கு கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறேன். மருத்துவத் துறை அமைச்சர் ஓடலாம் வாங்க என்று தான் சொல்கிறாரே தவிர, ஏழை மக்கள் பயன் பெறும் அரசு மருத்துவமனையை முறையாக நிர்வாகம் செய்யவில்லை.
வடசென்னையைச் சேர்ந்த பிரியா என்ற மாணவிக்கு தவறான சிகிச்சை வழங்கப்பட்டதால் உயிரிழந்த நிகழ்வு இரண்டு மாதத்திற்கு முன் நடந்தது. குழந்தைகள் நல மருத்துவமனையில் தலைமை காவலரின் மகளுக்கு தவறான சிகிச்சை வழங்கப்பட்டதால் குழந்தையின் கால் செயல் இழந்தது.
தொடர்ந்து, அரசு மருத்துவமனைகளில் தவறான சிகிச்சையின் காரணமாக இது போன்ற மோசமான நிகழ்வுகள் நடைபெற்ற வருகிறது. தவறான சிகிச்சையின் காரணமாக 2 ஆண்டுகளில் நிறைய பாதிப்புகள் ஏற்பட்டுள்ளது.
குழந்தையின் தாய் கூறும் கருத்தை கொச்சைப்படுத்தும் விதமாக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் அறிக்கை வெளியிட்டுள்ளார். அரசு மருத்துவமனைகளில் இது போன்ற சம்பவங்கள் நிகழாமல் தடுக்க வரும் முன் காப்பதே சிறந்தது.குழு அமைத்து விசாரணை செய்து அறிக்கை தாக்கல் செய்தால் குழந்தையின் கை மீண்டும் வந்து விடுமா? தாயின் கருத்தை விமர்சனம் செய்யும் அளவில் அமைச்சரின் அறிக்கை உள்ளது மிகவும் வேதனை அளிக்கிறது. குழந்தையின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு 50 லட்சம் ரூபாய் அரசு நிதி வழங்க வேண்டும், என கூறினார்.
தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த செந்தில் பாலாஜி, மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் தினந்தோறும் சென்று பார்த்து வந்தார். ஆனால், அரசு மருத்துவமனைக்கு வரும் ஏழை, எளிய மக்களுக்கு முறையான சிகிச்சை வழங்கப்படுகிறதா..? என்பதை பார்க்கத் தவறிவிட்டதாக கூறினார்.
0
0