பாஜக நிர்வாகியை துப்பாக்கியால் சுட்ட முன்னாள் ராணுவ வீரர் : நெல்லை அருகே பயங்கரம்!!

4 November 2020, 3:49 pm
Army Man Shoot - Updatenews360
Quick Share

நெல்லை : பாளையங்கோட்டையில் கடை முன்பு இருந்து புகைப்பிடித்த சம்பவத்தால் ஏற்பட்ட வாக்குவாதத்தில் பாஜக நிர்வாகியை ராணுவ வீரர் துப்பாக்கியால் சுட்ட சம்பவம் அரங்கேறியுள்ளது.

நெல்லை பாளையங்கோட்டை அடுத்த பெருமாள்புரம் பகுதியை சேர்ந்தவர் பெரியதுரை. 32 வயதான இவர் அப்பகுதியில் தனது தந்தையுடன் இணைந்து கறி கடை நடத்தி வருகிறார். பாரதிய ஜனதா கட்சியின் மாவட்ட இளைஞரணி பொதுச் செயலாளராகவும் பணியாற்றி வருகிறார்.

இவருக்கும் கடை அருகில் வசிக்கும் முன்னாள் ராணுவ வீரர்களுக்கும் இடையே இடம் தொடர்பாக பல்வேறு பிரச்சனை இருந்துவந்துள்ளது. கடை கழிவுகள் கொட்டுவதில் இருவருக்கும் இடையே தகராறு இருந்து வந்ததாக தெரிகிறது.

அப்போதெல்லாம் துப்பாக்கியை காட்டி சுட்டு விடுவதாக முன்னாள் ராணுவ வீரர் ஜெபமணி மிரட்டுவதாகவும் கூறப்படுகிறது. இந்த நிலையில் இன்று காலை பெரியதுரை கடையில் அவரது தந்தை இருந்த போது ஜெபமணி கடைக்கு எதிரே நின்று சிகிரெட் புகைத்துகொண்டே திட்டியதாக கூறப்படுகிறது.

அப்போது இருவருக்கும் இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் வாக்குவாதம் முற்றவே முன்னாள் ராணுவ வீரர் ஜெபமணி தனது துப்பாக்கியை எடுத்து பெரியதுரையை நோக்கி சுட்டுள்ளார். இதில் அவரது கையில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது.

இதனையடுத்து அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு பாளையங்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்துவந்த பெருமாள்புரம் போலீஸார் முன்னாள் ராணுவ வீரர் ஜெப மணியை கைது செய்ததோடு அவரது துப்பாக்கியையும் பறிமுதல் செய்தனர். அவரை பெருமாள்புரம் காவல்நிலையத்திற்கு அழைத்து சென்ற விசாரணை நடத்தினர்.

இதனிடையே காயமடைந்த பெரியதுரை அரசு மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சையை முடித்துக்கொண்டு மேல்சிகிச்சைக்காக நெல்லையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

இந்த சம்பவம் தொடர்பாக உரிய நடவடிக்கைகள் எடுக்ககோரி பாஜகவினர் பெருமாள்புரம் காவல் நிலையத்தில் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். இடத்தகராறில் பாஜக பிரமுகரை ராணுவ வீரர் துப்பாக்கியால் சுட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Views: - 20

0

0