ஆட்சியர் பெயரில் போலி ‘Email ID‘ : அரசு அதிகாரிகளிடம் தகவல் பெற்ற பலே கும்பல்!!

19 October 2020, 6:20 pm
Kanya Collector - Updatenews360
Quick Share

கன்னியாகுமரி : ஆட்சியர் பெயரில் போலி இமெயில் ஐடி தயாரித்து அரசு அதிகாரிகளிடம் தகவல் கேட்ட பலே கும்பல் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியாளராக பிரசாந்த் மு.வடநேரே இருந்து வருகிறார். இவர் குமரி மாவட்டத்தை சேர்ந்த அரசு அதிகாரிகளிடம் துறை ரீதியாக சந்தேகமும் விளக்கமும் கேட்பதற்காக தனது அலுவலக மெயில் இமெயில் ஐடியில் இருந்து மெயில் அனுப்புவது வழக்கம்.

இந்நிலையில் கடந்த சில நாட்களாக சில அரசுத் துறை உயர் அதிகாரிகளுக்கு துறை ரீதியாக சில தகவல்கள் கேட்டு மாவட்ட ஆட்சியாளரின் மெயில் ஐடி போன்ற மெயில் ஐடியில் இருந்து மெயில் வந்துள்ளது. இதனைத் தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் அனுப்புவதாக நினைத்து சில அதிகாரிகள் முக்கிய தகவல்களை அந்த போலி இ-மெயிலுக்கு அனுப்பியதாக தெரிகிறது.

இதற்கிடையில் சில அரசு அதிகாரிகள் மாவட்ட ஆட்சியாளர் அலுவலகத்தில் நேரடியாக வந்து அவரது நேர்முக உதவியாளரிடம், இவ்வாறு அனுப்பப்பட்ட மெயிலுக்கு பதில் அளிக்க வேண்டுமா அல்லது கலெக்டரின் பழைய மெயிலுக்கு அனுப்ப வேண்டுமா என்று கேட்டுள்ளனர்.

இதனால் அதிர்ச்சி அடைந்த கலெக்டரின் நேர்முக உதவியாளர் அப்படி எந்த மெயிலும் மாவட்ட ஆட்சியாளரிடமிருந்து இருந்து வரவில்லை என்பதை உறுதி செய்துள்ளார். இதன் மூலம் ஏதோ சமூக விரோத கும்பல் மாவட்ட ஆட்சியாளர் மெயில் ஐடி போன்ற மெயில் ஐடியை பயன்படுத்தி அரசுத்துறை உயர் அதிகாரிகளிடமும் முக்கிய தகவல்கள் திருடியது தெரியவந்தது.

இதனை தொடர்ந்து குமரி மாவட்ட ஆட்சியாளர் அலுவலகம் சார்பில் நேசமணி நகர் காவல் நிலையத்தில் இது தொடர்பாக புகார் அளிக்கப்பட்டுள்ளது. மேலும் மாவட்ட எஸ்பி அலுவலகத்தில் செயல்படும் சைபர் கிரைம் போலீசார் உதவியுடன் மெயில் ஐடி பயன்படுத்தும் ஐபி அட்ரஸ் கண்டுபிடிக்கும் பணி நடைபெற்று வருகிறது. 

குமரி மாவட்ட ஆட்சியாளரின் பெயரில் போலி ஈ மெயில் ஐடி தயாரித்து அரசுத் துறை அதிகாரிகளிடம் தகவல்களை திருடிய சம்பவம் அரசுத் துறை உயர் அதிகாரிகளை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.

Views: - 26

0

0