திரைப்பட பாணியில் போலி ரெய்டு…கான்ட்ராக்டர் வீட்டில் 200 சவரன் நகை அபேஸ்: தனிப்படை அமைத்து மர்மநபர்களுக்கு போலீசார் வலைவீச்சு…!!

Author: Rajesh
1 March 2022, 5:57 pm
Quick Share

திருவள்ளூர் அருகே வணிக வரித்துறை அதிகாரிகள் என அறிமுகப்படுத்தி சுமார் 200 சவரன் தங்கநகை மற்றும் 1 லட்சம் திருடிச் சென்ற குற்றவாளிகளை பிடிக்க 4 தனிப்படை அமைக்கப்பட்டு உள்ளதாக காவல்துறை தகவல் தெரிவித்துள்ளது.

திருவள்ளூர் அடுத்த வெள்ளகுளம் பகுதியில் கான்ட்ராக்டர் பாலமுருகன் தனது குடும்பத்தினருடன் வசித்து வருகிறார். அதிமுக பிரமுகரான இவர் கடந்த ஆட்சி காலத்தில் தமிழக அரசின் சாலை அமைக்கும் திட்டம் உள்ளிட்ட பல்வேறு அரசு பணிகளை காண்ட்ராக்ட் எடுத்து வேலை செய்து வந்தார்.

இந்த நிலையில் திமுக ஆட்சி அமைந்த பிறகு இவருக்கு அரசு சார்பில் பணி வழங்கப்படாமல் இருந்தது. இந்த நிலையில் இன்று காலை 4 கார்களில் 1 பெண் உட்பட 7 பேர் தங்களை வணிக வரித்துறை அதிகாரிகள் என்று அறிமுகம் செய்து கொண்டு போலி அடையாள அட்டையை காண்பித்து காண்ட்ராக்டர் பாலமுருகன் வீட்டில் நுழைந்துள்ளனர்.

மேலும் வருமானத்திற்கு ஏற்ப வரி செலுத்தாமல் வருமான வரி ஏய்ப்பு செய்துள்ளதாக கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் வீட்டில் சோதனை செய்து வந்துள்ளதாக தங்களை அறிமுகப்படுத்திக் கொண்டு அனைவரின் தொலைபேசி எண்ணையும் அணைத்து வைத்துள்ளனர்.

இதனையடுத்து, பீரோவில் இருந்த 80 லட்சம் மதிப்புள்ள சுமார் 200 சவரன் தங்க நகை மற்றும் 1 லட்சம் ரொக்கப் பணத்தை எடுத்து ரசீது எழுதியுள்ளனர். இதனையடுத்து காண்ட்ராக்டர் பாலமுருகன் ரசிது கேட்ட பொழுது தாங்கள் நுங்கம்பாக்கத்தில் உள்ள வணிக வரி அலுவலகத்தில் வந்து பெற்று செல்லுமாறு கூறி தொலைபேசி எண்ணையும் கொடுத்துள்ளனர்.

பின்னர் 30நிமிடம் கழித்து காண்ட்ராக்டர் பாலமுருகன் அந்த தொலைபேசியில் அழைத்த போது அந்த தொலைபேசி எண்ணை அணைத்து வைக்கப்பட்டுள்ளது. இதனை அடுத்து தாங்கள் ஏமாற்றப்பட்டு நகைகள் திருடப்பட்டது தெரியவந்ததையடுத்து செவ்வாபேட்டை காவல்துறைக்கு தகவல் கொடுத்துள்ளனர்.

மேலும் பூந்தமல்லி சரக துணை ஆணையர் மற்றும் உதவி ஆணையர் முத்துப்பாண்டி ஆகியோர் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை மேற்கொண்டனர் பின்பு போலி வணிக வரித்துறை அதிகாரிகளை பிடிக்க 4 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தனர்.

Views: - 482

0

0