உறவினர் வீட்டில் கொள்ளையடித்து ஊட்டியில் உல்லாசம் : நகைகளை திருடி மாளிகை கட்டிய கள்ளக்காதல் ஜோடி!!

Author: Udayachandran RadhaKrishnan
30 September 2021, 7:15 pm
Kanyakumari Arrest -Updatenews360
Quick Share

கன்னியாகுமரி : உறவினர் வீட்டில் கொள்ளையடித்து ஊட்டியில் உல்லாசமாக இருந்த கள்ள காதல் ஜோடியை கைது செய்த போலீசார் தங்க நகைகளையும் மீட்டனர்.

கன்னியாகுமரி மாவட்டம் சேரமங்கலம் பகுதியை சேர்ந்தவர் பேபி சுதா (வயது 44) நாகர்கோவிலில் உள்ள தனியார் மருத்துவமனையில் செவிலியராக வேலை பார்த்து வருகிறார். இவரது கணவர் வெளிநாட்டில் வேலை பார்த்து வரும் நிலையில் பேபிசுதா தனது இரு மகள்களுடன் சேரமங்கலத்தில் உள்ள தனது வீட்டில் வசித்து வந்தார்.

கடந்த ஜனவரி மாதம் 26-ம் தேதி பெத்தேல்புரம் பகுதியில் வசிக்கும் தனது தம்பி சுதர் என்பவரின் மனைவி ஷர்மிளா மோள் பேபிசுதாவை விருந்துக்கு அழைத்துள்ளார். இதையடுத்து பேபிசுதா தனது வீட்டை பூட்டி விட்டு ஷர்மிளாமோள் வீட்டிற்கு சென்றுள்ளார்.

அங்குள்ள தேவாலய திருவிழாவில் கலந்து கொண்டு விருந்து முடித்து ஜனவரி 28-ம் தேதி பேபிசுதா சேரமங்கலத்தில் உள்ள தனது வீட்டிற்கு திரும்பிய போது அவரது வீட்டின் பின்பக்க கதவுகள் மற்றும் அறை கதவுகள் உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ந்த அவர் அறையில் உள்ள பீரோவை சென்று பார்த்த போது அதில் இருந்த 50-சவரன் தங்க நகைகள் கொள்ளை போனது தெரியவநத்து.

இதையடுத்து மண்டைக்காடு காவல் நிலையத்தில் புகாரளித்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்த நிலையில் கொள்ளையர்களை பிடிக்க சப்-இன்ஸ்பெக்டர் ஜான் போஸ்கோ தலைமையில் தனிப்படை அமைத்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பத்ரி நாராயணன் உத்தரவிட்ட நிலையில் தனிப்படை போலீசார் விசாரணையில் ஈடுபட்டனர்.

கடந்த 7 மாதங்களாக தனிப்படை போலீசாருக்கு கொள்ளை குறித்து எந்த தடயமும் கிடைக்காத நிலையில் கொள்ளை நடந்த அன்று அந்த பகுதியில் இயங்கிய செல்போன் எண்களை ஆய்வு செய்த போது அந்த பகுதியில் சந்தேகிக்கும் வகையில் பெத்தேல்புரம் பகுதியை சேர்ந்த வாலிபர் ஒருவரின் செல்போன் உபயோகத்தில் இருந்ததும் அந்த வாலிபர் செல்போனில் இருந்து பெத்தேல்புரம் பகுதியை சேர்ந்த இளம்பெண் ஒருவரிடம் அடிக்கடி பேசி கொண்டிருந்ததையும் தனிப்படை போலீசார் கண்டுபிடித்தனர்.

இதையடுத்து தனிப்படை போலீசார் நேற்று காலை அந்த வாலிபரை பெத்தேல்புரத்தில் அவரது வீட்டில் சுற்றி வளைத்து அவரையும் அவருடன் இருந்த இளம்பெண்ணையும் கைது செய்து மண்டைக்காடு காவல் நிலையம் அழைத்து விசாரணை நடத்தினர்.

விசாரணையில் அந்த வாலிபர் பெத்தேல்புரம் பகுதியை சேர்ந்த 27 வயதான ஏரோநாட்டிக்கல் பொறியளாரான பபின் என்பதும் ஆஸ்திரேலியாவில் வேலை பார்த்து வந்த அவர் கொரோனா நோய் தொற்றால் வேலையிழந்து கடந்த ஒன்றரை வருடத்திற்கு முன் சொந்த ஊர் வந்த நிலையில் பக்கத்து வீட்டை சேர்ந்த சுதர் என்பவரின் மனைவி ஒரு ஆண் குழந்தைக்கு தாயான 24 வயது கம்யூட்டர் பட்டதாரியான ஷர்மிளா மோள் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டதாகவும் பின்னர் அவருடன் நெருங்கி பழகி கள்ள தொடர்பை ஏற்படுத்தி அடிக்கடி இருவரும் உல்லாசமாக இருந்து வந்ததும் தெரியவந்தது.

ஒரு கட்டத்தில் உல்லாச வாழ்க்கைக்கு பணம் இல்லாத நிலையில் ஷர்மிளாமோள் தன்னை அழைத்து சேரமங்கலத்தில் வசிக்கும் தனது கணவரின் சகோதரி பேபி சுதா நல்ல வசதியாக இருப்பதாகவும் வீட்டில் நகைகள் எங்கெங்கு இருக்கிறது என்று தனக்கு தெரியும் என்றும் அவரது வீட்டை கொள்ளையடித்தால் நாம் உல்லாசமாக சொகுசு வாழ்க்கை வாழலாம் என்றும் தன்னிடம் கூறியதாக கூறினார்.

இதையடுத்து தானும் ஷர்மிளா மோளின் திட்டத்திற்கு உடன்பட இருவரும் திட்டம் தீட்டி அவரது கணவர் சகோதரி பேபி சுதாவை கடந்த ஜனவரி மாதம் 26-ம் விருந்துக்காக வீட்டிற்கு அழைத்து ஷர்மிளாமோளை தங்க வைத்து விட்டு 27-ம் தேதி இரவு திட்டமிட்டப்படி தான் சேரமங்கலம் சென்று அவரது வீட்டின் பின்பக்க கதவை உடைத்து உள்ளே புகுந்ததோடு ஷர்மிளாமோளுக்கு செல்போனில் தொடர்பு கொண்டு நகைகள் எங்கெங்கு இருக்கிறது என்று கேட்டு அவரின் அறிவுறுத்தலின்படி 50-சவரன் தங்க நகைகளை அங்கிருந்து கொள்ளையடித்து தப்பி வந்ததாக கூறினார்.

பின்னர் ஷர்மிளா தனது கணவரிடம் வேலைக்கு நேர்முக தேர்வுக்காக சென்னை செல்வதாக கூறி வீட்டை விட்டு வெளியேறிய நிலையில் இருவரும் நகைகளை விற்று ஊட்டியில் சொகுசு வீடு வாடகைக்கு எடுத்து உல்லாசமாக பல நாட்கள் இருந்து விட்டு சொந்த ஊர் திரும்பியதாகவும் யாருக்கும் சந்தேகம் வராத நிலையில் அடிக்கடி அதேப்போல் ஊட்டிக்கு சென்று உல்லாசமாக இருப்பதும் தற்போது நகைகளை விற்ற பணத்தில் தான் சொந்தமாக சொகுசு வீடு ஒன்றை கட்டி கிரக பிரவேசம் செய்ததோடு இருவரும் வெளியூர்களுக்கு செல்லாமல் அந்த வீட்டிலேயே அடிக்கடி தனிமையாக சந்தித்து உல்லாசமாக இருந்து வந்ததும் தெரியவந்துள்ளது. இந்த நிலையில் போலீசார் இருவரையும் தனது வீட்டில் வைத்து பிடித்து விட்டதாகவும் வாக்குமூலம் அளித்தார்.

இதனையடுத்து போலீசார் கள்ள காதல் ஜோடியை கைது செய்ததோடு அவர்களிடம் இருந்து தங்க நகைகளை மீட்டதோடு இரணியல் குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையிலடைத்தனர்.

கணவர் மற்றும் ஆண் குழந்தை இருந்தும் இளம்பெண் ஒருவர் கள்ள காதலனுடன் சேர்ந்து உல்லாசமாக இருக்க உறவினர் வீட்டிலேயே கொள்ளையடித்து சிறை சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Views: - 532

0

0