ரஜினியை அரசியலுக்கு அழைக்கும் தொண்டர்கள் : போயஸ் கார்டனில் குவிந்த கூட்டமும்… சென்னையை கலக்கும் போஸ்டரும்..!!!

30 October 2020, 1:45 pm
rajinikanth - updatenews360
Quick Share

சென்னை : நடிகர் ரஜினிகாந்தை அரசியலுக்கு அழைக்கும் விதமாக சென்னையில் அவரது ரசிகர்கள் போயஸ் கார்டனில் குவிந்து வருகின்றனர்.

தமிழக சட்டப்பேரவை தேர்தல் அடுத்த ஆண்டு மே மாதம் நடைபெற உள்ளதால், நடிகர் ரஜினிகாந்த் வரும் டிசம்பர் அல்லது ஜனவரியில் அரசியல் களம் காணுவார் என அவருக்கு நெருக்கமான தலைவர்கள் கூறி வந்தனர். இதனிடையே, ரஜினிகாந்த் வெளியிட்டது போன்ற அறிக்கை அண்மையில் சமூக வலைதளங்களில் டிரெண்டாகி வந்தது. அதில், கொரோனா தொற்று அதிகரித்து இருப்பதாலும், தற்போதைக்கு அரசியல் நடவடிக்கைகளில் ஈடுபடக் கூடாது என மருத்துவர்கள் பரிந்துரை செய்திருப்பதாகவும், சிறுநீரக அறுவை சிகிச்சை செய்திருப்பதால், தொற்று எளிதில் தாக்கும் அபாயம் இருப்பதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.

rajini-updatenews360

இந்த அறிக்கைக்கு மறுப்பு தெரிவித்து நடிகர் ரஜினிகாந்த் விளக்க அறிக்கை ஒன்றை நேற்று வெளியிட்டார். அதில், “என் அறிக்கை போல ஒரு கடிதம் சமூக வலைதளங்களிலும், ஊடகங்களிலும் தீவிரமாக பரவிக் கொண்டு வருகிறது. அது என்னுடைய அறிக்கை அல்ல என்பது அனைவருக்கும் தெரியும். இருப்பினும், அதில் வந்திருக்கும் என் உடல்நிலை மற்றும் எனக்கு மருத்துவர்கள் அளித்த அறிவுரைகள் குறித்த தகவல்கள் அனைத்தும் உண்மை. இதைப்பற்றி தகுந்த நேரத்தில் என் ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகளோடு கலந்தாலோசித்து எனது அரசியல் நிலைப்பாட்டை பற்றி மக்களுக்கு தெரிவிப்பேன்,” எனக் குறிப்பிட்டிருந்தார்.

இதைத் தொடர்ந்து, அவரது உடல்நிலையை புரிந்து கொண்ட ரசிகர்கள் மற்றும் அவரது ஆதரவாளர்கள் #ஓட்டுன்னுபோட்டாரஜினிக்குதான் என்னும் ஹேஸ்டேக்கை சமூக வலைதளங்களில் நேற்று டிரெண்ட் செய்தனர்.

இந்த நிலையில், நடிகர் ரஜினியை அரசியலுக்கு அழைக்கும் விதமாக சென்னையின் முக்கிய இடங்களில் அவரது ரசிகர்கள் போஸ்டர்களை ஒட்டி வருகின்றனர். அந்தப் போஸ்டரில், “நீங்க வாங்க ரஜினி எங்கள் ஆதரவு உங்களுக்குத்தான், ஓட்டுன்னு போட்டா ரஜினிக்குதான், மாற்றத்தை விரும்பும் மக்கள்,” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

rajinikanth fans - updatenews360

மேலும், சென்னை போயஸ் கார்டனில் உள்ள நடிகர் ரஜினியின் வீட்டு முன்பு அவரது ரசிகர்கள் திரள தொடங்கினர். அவர்கள் ஒரே மாதிரியான வாசகங்கள் அடங்கிய டிசர்ட்டை அணிந்திருந்தனர். அதாவது, ” அரசியல், ஆட்சி மாற்றம், இப்ப இல்லைன்னா.. இனி எப்பவும் இல்லை…, தலைவரும், முதல்வரும் நீயே,” எனக் குறிப்பிடப்பட்டிருந்தது.

இதனிடையே, “மக்கள் மன்ற நிர்வாகிகளிடம் ஆலோசித்து, விரைவில் தெளிவான நிலைப்பாட்டை ரஜினி அறிவிப்பார். மக்களுக்கு நல்ல செய்தி வரும்,” என கராத்தே தியாகராஜன் தெரிவித்துள்ளார்.

Views: - 16

0

0

1 thought on “ரஜினியை அரசியலுக்கு அழைக்கும் தொண்டர்கள் : போயஸ் கார்டனில் குவிந்த கூட்டமும்… சென்னையை கலக்கும் போஸ்டரும்..!!!

Comments are closed.