உண்மையை மூடி மறைக்க முயற்சி… மேல்மா பெண் விவசாயிகளை கைது செய்தது கண்டனத்திற்குரியது : திமுக மீது பிஆர்.பாண்டியன் கோபம்..!!

Author: Babu Lakshmanan
22 February 2024, 5:01 pm

சென்னையில் மேல்மா பெண் விவசாயிகளை கைது செய்திருப்பது வன்மையாக கண்டிக்கத்தக்கது. உடனடியாக நிபந்தனை இன்றி விடுதலை செய்ய வேண்டும் என்று தமிழ்நாடு அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழு தலைவர்
பிஆர்.பாண்டியன் வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்து இருப்பதாவது:- திருவண்ணாமலை மாவட்டம் மேல்மா சிப்காட் நிலம் தர மறுத்து போராடி வரும் விவசாயிகள் மீது சட்டமன்றத்தில் அவதூறு பிரச்சாரம் செய்து உண்மையை மூடி மறைக்க முயற்சிக்கும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் எவ.வேலுவின் மீது நடவடிக்கை எடுக்க கோரி முதலமைச்சரை சந்தித்து மனு முறையிடுவதற்காக இரண்டு தினங்களாக அப்பகுதி விவசாயிகள் முயற்சித்து வருகிறார்கள்.

நேற்று (21.02.2024) திருவண்ணாமலையிலிருந்து ஊர்வலமாக புறப்பட்டவர்கள் கைது செய்யப்பட்டனர். இன்று 20க்கும் மேற்பட்ட பெண்கள் சென்னையில் தலைமைச் செயலகத்தை நோக்கி சென்றவர்களை கைது செய்யப்பட்டு வடசென்னையில் பழைய வண்ணாரப்பேட்டை காவலர் குடியிருப்பு சமுதாய நலக்கூடத்தில் அடைத்து வைக்கப்பட்டுள்ளனர். அவர்களை நேரில் சந்தித்து பார்த்து ஆறுதல் கூறுவதற்காக சென்றேன். என்னை (பி.ஆர்.பாண்டியன்) காவல்துறையினர் தடுத்து நிறுத்தி உள்ளது வன்மையாக கண்டிக்கத்தக்கது.

மேல்மா சிப்காட்டிற்கு எதிராக போராடுபவர் விவசாயிகளே கிடையாது என்றும் அவர்கள் திட்டமிட்டு வளர்ச்சிக்கு எதிரானவர்கள் என்றும் சட்டமன்றத்தில் அமைச்சர் வேலு குற்றம் சாட்டியிருந்தார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து முதலமைச்சரை சந்தித்து முறையிடுவதற்காக அவர்கள் சென்னை வந்துள்ளனர். எனவே விவசாயிகள் ஒப்புதலின்றி விளை நிலங்களை கையகப்படுத்த கூடாது என்றாலும் அது சட்டவிரதம் என்று குண்டர் சட்டத்தில் சிறையிலடைக்கிறது.

நெல், கரும்பு மற்றும் நிலக்கடலை உள்ளிட்ட தோட்டக்கலை பயிர்கள் ஆண்டு முழுவதும் பயிரிட்டு வருவதை விளைநிலங்களை நேரில் கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளேன். இந்நிலையில் தரிசு நிலம் என்கிற பெயரில் சிப்காட் அமைக்க முயற்சிப்பது ஏற்கத்தக்கது அல்ல. இது குறித்து முதலமைச்சர் சந்தித்து முறையிட வந்த பெண் விவசாயிகளை கைது செய்திருப்பது வன்மையாக கண்டிக் கத்தக்கது.

செய்தியாளர்களோ, விவசாயிகள் சங்க தலைவர்களோ, சந்திக்க முடியாத நெருக்கடியான இடத்தில் அடைத்து வைத்திருப்பது தமிழ்நாடு அரசின் பெண்களுக்கு எதிரான விரோதப் போக்கை எடுத்துக்காட்டுவதாக உள்ளது. எனவே என்னை தடுப்பதால் தமிழ்நாடு அரசுக்கு நன்மை பயக்கும் என்றால் அதை நான் ஏற்று திரும்பி வந்திருக்கிறேன். அதே நேரத்தில் பெண்களை கைது செய்து மிரட்டுவதால் மேல்மா சிப்காட் அமைத்து விட முடியாது என எச்சரிக்கை செய்கிறேன். சமூகநீதி பேசும் முதலமைச்சர் நீதிகேட்டு முறையிடுவதற்காக வந்த பெண்களை கைது செய்து அடக்குமுறையை காவல் துறை மூலம் தூண்டுவது நியாயமா? வன்மையாக கண்டிக்கிறேன் உடனடியாக அவர்கள் நிபந்தனையின்றி விடுதலை செய்ய வலியுறுத்துகிறேன்.

மேலும், இரு விவசாயிகள் மெரினா கடற்கரையில் உளவு பிரிவு காவலரால் தாக்கப்பட்டுள்ளனர். இதுகுறித்து முதலமைச்சர் உரிய விளக்கமளிக்க வேண்டும் என வலியுறுத்துகிறேன், என தெரிவித்துள்ளார்.

  • G.V. Prakash understood Sainthavi at the time of separation.. Affection blossomed during the divorce case பிரியும் நேரத்தில் சைந்தவியை புரிந்து கொண்ட ஜி.வி பிரகாஷ்.. விவாகரத்து வழக்கில் மலர்ந்த பாசம்!