மாட்டிறைச்சி எடுத்துச் சென்ற பெண்ணுக்கு நேர்ந்த கொடுமை.. அரசுப் பேருந்து ஓட்டுநர், நடத்துநர் மீது பாய்ந்தது வன்கொடுமை தடுப்பு சட்டம்!

Author: Babu Lakshmanan
22 February 2024, 4:48 pm
Quick Share

அரசு பேருந்தில் மாட்டிறைச்சி எடுத்துச் சென்றதற்காக பாதி வழியில் காட்டுப் பகுதியில் இறக்கிவிட்ட பெண் அளித்த புகாரின் பேரில், ஓட்டுநர் மற்றும் நடத்துனர் மீது வன்கொடுமை தடுப்பு சட்டத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

தருமபுரி மாவட்டம் அரூர் அடுத்த நவலை கிராமத்தைச் சேர்ந்த 59 வயதுடைய பாஞ்சாலை. தாழ்த்தப்பட்ட வகுப்பை சார்ந்த இவர் தினம்தோறும் அரூர் நகரத்திலிருந்து நவலை கிராமத்திற்கு அவரது அன்றாட வாழ்விற்காக மாட்டிறைச்சி எடுத்து சென்று வியாபாரம் செய்வது வழக்கம். வழக்கம்போல் மாட்டிறைச்சி வாங்கி கொண்டு அரசு பேருந்தில் ஏறி பயணம் செய்து கொண்டிருந்தார்.

பயணச்சீட்டு எடுக்க வந்த நடத்துனர் ரகு என்பவர் இதற்கு முன் உன்னை எத்தனை முறை வர வேண்டாம் என்று சொல்லி இருந்தேன், இப்போது ஏன் வந்தாய் முதலில் பேருந்தை விட்டு கீழே இறங்கு என்று அவர் மனது புண்படும்படியும் மன உளைச்சலுக்கு ஆளாக்கி, அரூர் மோப்பிரிப்பட்டி காட்டுப்பகுதியில் பேருந்தை நிறுத்தி இறக்கியுள்ளார்.

மேலும், வயதான அந்த மூதாட்டி இன்று ஒரு நாள் மட்டும் என்னை விட்டு விடுங்கள், இனி நான் கொண்டு வரமாட்டேன். தயவு செய்து என்னை அடுத்த பேருந்து நிறுத்தத்தில் கூட இறக்கி விடுங்கள், என்று நடத்துனரிடம் கேட்டுள்ளார். அதை பொறுப்பெடுத்தாமல் நடத்துனர் ரகு, அந்த மூதாட்டியை சுடும் வெயில் என்றும் பாராமல் சாலையிலேயே இறக்கி விட்டுள்ளார்.

இந்த தகவல் சமூக வலைத்தளங்களில் பரவி உள்ள நிலையில், நடத்துனர் மற்றும் ஓட்டுநர் ஆகிய இருவர் மீதும் தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பல விமர்சனங்கள் எழுந்துள்ளன.

இந்த நிலையில் தர்மபுரி மண்டல போக்குவரத்து நிர்வாகம் நடத்துனர் ரகு மற்றும் ஓட்டுநர் சசிகுமாரை தற்காலிக பணி இடைநீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளது. இது தொடர்பாக இவர்கள் மீது வன்கொடுமை தடுப்பு சட்டத்தில் கைது நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என சமூக ஆர்வலர்கள் தெரிவித்து வருகின்றனர். தொடர்ந்து இந்த பகுதியில் தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சார்ந்தவர்கள் மீது இது போன்ற ஆதிக்க சாதியினர் ஏற்படுத்தும் இன்னல்களால் மன உளைச்சலுக்கு ஆளாகி வருகின்றனர்.

எனவே இது போன்ற செயல்களில் ஈடுபடும் அரசு பணியாளர்கள் மீதும் மக்கள் மீதும் நடவடிக்கை எடுத்து அவர்களுக்கு விழிப்புணர்வு கொடுக்க வேண்டுமென சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். மேலும், கடந்த இரண்டு வாரத்துக்கு முன்பு தான் போளையம் பள்ளி என்ற கிராமத்தில் தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சார்ந்தவர்களுக்கு கொட்டாங்குச்சியில் டீ கொடுத்த சம்பவம் அரங்கேறியுள்ள நிலையில், அரசு பேருந்தில் மாட்டிறைச்சி எடுத்துச் செல்வதற்காக பேருந்தில் பயணம் செய்த முதியவர் ஒருவரை பாதி வழியில் இறக்கி விட்ட சம்பவம் அரங்கேறி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இதனிடையே, நேற்று இரவு பாதிக்கப்பட்ட பெண் அரூர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன் அடிப்படையில் இன்று
வன்கொடுமை தடுப்பு சட்டம் பிரிவின் கீழ் நான்கு பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

Views: - 356

0

0