பணம் கட்டத் தவறிய விவசாயியை காரில் கடத்திய பைனான்ஸ் கும்பல்: அதிரடியாக சுற்றிவளைத்த போலீசார்…

8 September 2020, 5:15 pm
Quick Share

தமிழகத்தில் கடந்த 5 மாதமாக ஊரடங்கு மற்றும் 144 தடை சட்டம் அமுல்படுத்தப்பட்டு இருந்ததால் விவசாயம் உள்ளிட்ட தொழில்கள் பெரும் பாதிப்படைந்தது. அதிலும் குறிப்பாக ஊரடங்கு சட்டம் அமுல்படுத்துவதற்கு முன்னதாகவே விவசாயிகள் கடன் வாங்கி விவசாயத்தில் முதலீடு செய்தனர். நிலத்தில் விளைந்த பொருட்களை சந்தைப்படுத்த முடியாமல் பல விவசாயிகள் விளைந்த பொருட்களை நிலத்திலேயே அறுவடை செய்யாமல் விட்டுவிட்டனர்.

இவ்வளவு கஷ்டமான சூழ்நிலையில் காஞ்சிபுரம் மாவட்டம் வையாவூர் பகுதியை சேர்ந்த பார்த்தசாரதி என்பவர் விவசாய தொழிலை மேம்படுத்தவும், நேரம் கிடைக்கும்போது ரியல் எஸ்டேட் தொழில் செய்தும் வருமானத்தை ஈட்டி வந்தார். விவசாய தொழில் அபிவிருத்திக்காக திண்டிவனம் அடுத்த காவேரிபாக்கம் பகுதியை சேர்ந்த லஷ்மணன் என்ற பைனான்சியரிடம் கடந்த 5 மாதங்களுக்கு முன்பு 6 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் கடனாக வாங்கினார். கொரோனா தொற்று காரணமாக குறிப்பிட்ட தேதியில் பணத்தை திருப்பி அளிக்க முடியவில்லை. இதனால் ஆவேசமடைந்த பைனான்சியர் லஷ்மணன் என்பவர் திண்டிவனம் அடுத்த காவேரிப்பாக்கம் பகுதியை சேர்ந்த ஐந்து நபர்களை காரில் அழைத்து வந்து வையாவூரில் உள்ள பார்த்தசாரதியின் வீட்டுக்கு சென்று பணம் கேட்டு சப்தம் போட்டார்கள்.

அச்சமடைந்த பார்த்தசாரதியின் அக்கா, தம்பி செங்கல்பட்டு சென்றுள்ளார். வேலையை முடித்துவிட்டு காஞ்சிபுரத்திற்குதான் வந்து கொண்டுள்ளார் எனக் கூறினார். இதைக் கேட்ட பைனான்ஸ் கும்பல் அங்கிருந்து காரை எடுத்துக்கொண்டு செங்கல்பட்டு சாலையில் பார்த்தசாரதியை தேடி சென்றது. பழையசீவரம் அருகே பைக்கில் வந்து கொண்டிருந்த பார்த்தசாரதியை கண்டவுடன் மடக்கி பிடித்தது. பைக்கை நிறுத்திய பார்த்தசாரதியை பைனான்ஸ் கும்பல் குண்டுகட்டாக தூக்கி காரில் ஏற்றி கடத்தி கொண்டு சென்னை திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் பறந்தது.

காரில் வந்தவர்களுக்கு பசி எடுத்த காரணத்தினால் சாப்பிடுவதற்காக தேசிய நெடுஞ்சாலையில் பழவேலி என்ற இடத்தில் வைகை உணவகம் முன்பு காரை நிறுத்தியது. பார்த்தசாரதியை காரிலேயே விட்டு விட்டு பைனான்ஸ் கும்பல் மட்டும் உணவருந்த ஹோட்டல் உள்ளே சென்றது. இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்திக்கொண்ட பார்த்தசாரதி செல்பேசி மூலம் காவல்துறையினருக்கு தகவல் அளித்தார். தகவலை கேள்விப்பட்ட டிஐஜி சாமுண்டீஸ்வரி அவர்கள் கடத்தல் கும்பலை உடனடியாக மடக்கிப் பிடிக்க காவல்துறைக்கு உத்தரவிட்டார். அதன்பேரில் செங்கல்பட்டு நகர காவல் துறையினர் விரைந்து சென்று வைகை ஓட்டல் முன்பு காரில் அமர்ந்திருந்த பார்த்தசாரதியை மீட்டனர். மேலும் ஓட்டலில் உணவருந்திக் கொண்டிருந்த பைனான்ஸ் கும்பலை மடக்கிப் பிடித்தனர்.

அனைவரையும் செங்கல்பட்டு நகர காவல் நிலையத்தில் வைத்து விசாரணை செய்தனர். பார்த்தசாரதியை கடத்திய கும்பல் அனைவரும் திண்டிவனம் காவேரிபாக்கம் பகுதியை சேர்ந்தவர்கள் என தெரியவந்தது. அதன் பேரில் காவேரிபாக்கம் பகுதியை சேர்ந்த மணிகண்டன் ,விஜி, மைக்கேல்ராஜ் சந்தோஷ், ராஜரத்தினம் ஆகிய 5 பேரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தது. தலைமறைவான பைனான்சியர் லக்ஷ்மணனை காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகிறார்கள்.

Views: - 0

0

0