திடீர் மழையால் நீரில் மூழ்கிய பயிர்கள்…! விவசாயிகள் வேதனை

Author: kavin kumar
2 January 2022, 4:54 pm
Quick Share

திருவள்ளூர்: திடீர் மழையால் பயிர்கள் நீரில் மூழ்கியதால் விவசாயிகள் வேதனையில் உள்ளனர்.

உலகுக்கே உணவிடும் விவசாயிகள், ஒருபடி நெல்லைக்கூட வயலில் இருந்து எடுக்கமுடியாமல் போன சோகத்தை அனுபவித்துக் கொண்டிருக்கின்றனர். இதுவரை காணாத அளவுக்கு அறுவடை நேரத்தில் தொடர் கனமழையை எதிர்கொண்டு பெரும் சேதத்தைசந்தித்துள்ளனர். திருவள்ளூர் மாவட்டத்தில் நல்ல பருவமழை பெய்ததாலும், 50 ஆயிரம் எக்டேர் பரப்பளவில் இந்த ஆண்டு சம்பா சாகுபடி பணிகள் மேற்கொள்ளப்பட்டன. பொங்கல் பண்டிகையையொட்டி அறுவடைக்கு தயாராக இருந்த விவசாயிகளுக்கு கடந்த இரண்டு நாட்களாக திடீரென பெய்த தொடர் கன மழை கண்ணீராக மாறியுள்ளது.

திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள சென்றாம்பாக்கம், மணலிசெம்பியம், சென்னை புறநகர்பகுதிகளில் திடீரென பெய்த தொடர் கனமழையால் சுமார் 100 ஏக்கருக்கு மேல் பயிரிடப்பட்டிருந்த நெற்பயிர்கள் நீரில் மூழ்கி முளைக்கத் தொடங்கியதால் என்ன செய்வதென்றே தெரியாமல் விவசாயிகள் தவித்து வருகின்றனர். மழைநீர் வடிந்து வெளியேற வழியில்லாமல் விவசாயிகள் தங்களது நெற்பயிரை அறுவடை செய்ய முடியாமல் நஷ்டம் அடைந்து வருகின்றனர். வேளாண்துறை அதிகாரிகள் நீரில் மூழ்கியுள்ள நெற்பயிர்களை உரிய முறையில் பார்வையிட்டு ஆய்வு செய்து தங்களுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர்.

Views: - 211

0

0