மூத்த மகள் காதல் திருமணம் செய்துகொண்டதால் விபரீதம் : மனைவி, 2 மகள்களை கொலை செய்துவிட்டு தந்தை தூக்கிட்டு தற்கொலை : நாகையில் நடந்த சோகம்…!

Author: kavin kumar
18 February 2022, 4:26 pm
Quick Share

நாகப்பட்டினம் : நாகை அருகே மனைவி மற்றும் 2 மகள்களை கொலை செய்துவிட்டு தந்தை தற்கொலை செய்துகொண்டு உயிரிழந்துள்ள சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

நாகை மாவட்டம் கீழ்வேளூர் ஒன்றியம் புதுச்சேரி கிராமத்தை சேர்ந்தவர் லட்சுமணன் (55).  வீட்டிலேயே டீ மற்றும் டிபன் கடை நடத்தி வந்த லட்சுமணன், தனது மனைவி புவனேஸ்வரி (45), மகள்கள் தனலட்சுமி (21), வினோதினி (18), அட்ச்சயா (15) ஆகியோருடன் குடும்பத்தோடு வசித்து வந்துள்ளார். மூத்த மகள் தனலட்சுமி நாகையில் உள்ள தனியார் முழு உடல் பரிசோதனை ஆய்வகத்தில் பணியாற்றி வந்துள்ளார். இந்த நிலையில் சொந்த கிராமத்தை சேர்ந்த கீழத்தெருவில் வசிக்கும் அப்பு என்கிற விமல்ராஜிக்கும், தனலெட்சுமிக்கும் காதல் மலர்ந்துள்ளது. இருவேறு சமூகத்தை சேர்ந்தவர்கள் என்பதால், பெண்ணின் தந்தை லட்சுமணன் மகளின் காதலுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

இதனால் பெற்றோரின் எதிர்ப்பை மீறி கடந்த 7 மாதங்களுக்கு முன்பு தனலட்சுமி, விமல்ராஜை திருமணம் செய்து அவரோடு அருகாமையில் உள்ள கீழத்தெருவில் தனியாக வாழ்ந்து வருகிறார். இதனால் மன உளைச்சலில் இருந்து வந்த லட்சுமணன், கடந்த 4 தினங்களாக டீ கடையை திறக்காமல் சோகமாக இருந்து வந்துள்ளார். வழக்கமாக காலை 7 மணியாகியும், இன்றும் டீ கடை திறக்காததால் சந்தேகம் அடைந்த அப்பகுதி மக்கள் சத்தம் எழுப்பியதுடன், கீழ்வேளூர் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்துள்ளனர். பின்னர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த கீழ்வேளூர் போலிசார், வீட்டின் கதவை உடைத்து பார்த்தபோது 4 பேர் உயிரிழந்து கிடந்தது தெரிய வந்தது.

விசாரணையில், மேற்கொண்ட லட்சுமணன், மனைவி புவனேஸ்வரி மற்றும் இரண்டு மகள்கள் வினோதினி, அட்சயா ஆகியோரை குழவி கல்லை தலையில் போட்டு கொலை செய்துவிட்டு தானும் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டது தெரியவந்தது. சம்பவ இடத்தில் நாகை எஸ்பி ஜவஹர் நேரில் விசாரணை நடத்தியதை தொடர்ந்து, நால்வரின் சடலங்களும் பிரேத பரிசோதனைக்காக நாகை அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. சம்பவம் அறிந்த சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த நூற்றுகணக்கான பொதுமக்கள் அங்கு திரண்டதால் பரபரப்பான சூழல் ஏற்பட்டு வரும் நிலையில், சம்பவ இடத்தில் மோப்பநாய், தடயவியல் நிபுணர்கள் கொண்டு  போலிசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Views: - 506

0

0