புற்றுநோய் பாதித்த மகன்…விஷஊசி செலுத்தி இரக்கமின்றி கொன்ற தந்தை: மருத்துவ உதவியாளர்கள் உள்பட மூவர் கைது..!!

Author: Aarthi Sivakumar
5 October 2021, 1:57 pm
Quick Share

சேலம்: புற்றுநோயால் அவதிப்பட்ட மகனுக்கு விஷ ஊசி போட்டு கொலை செய்த தந்தை உள்பட 3 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.

சேலம் மாவட்டம், கொங்கணாபுரம் அருகே உள்ளது கட்சுபள்ளி கிராமம். இங்குள்ள குட்டைக் காரன் வளவு பகுதியைச் சேர்ந்தவர்கள் பெரியசாமி – சசிகலா தம்பதி. இவர்களுக்கு 18 வயதில் செந்தமிழ், 14 வயதில் வண்ணத் தமிழ் ஆகிய இரு மகன்கள் உள்ளனர்.

இந்நிலையில், இளையமகன் வண்ணத்தமிழின் காலில் காயம் ஏற்பட்ட பகுதியில் புற்றுநோய் உருவானதாகவும் அது மிகவும் மோசமடைந்து மிகவும் பாதிப்புக்குள்ளான நிலை ஏற்பட்டதாகவும் மருத்துவர்கள் கூறியுள்ளார்கள். இதனையடுத்து அவருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனால் வண்ணத் தமிழின் காலில் ஏற்பட்ட புற்று நோய், நாளுக்கு நாள் தீவிரமடைந்ததாம். இதனால் வண்ணத்தமிழ் கடும் வேதனையில் துடித்து வந்திருக்கிறார்.

இதனால், மகனின் துன்பத்தை காணப் பொறுக்காத பெரியசாமி சிறுவனை கருணை கொலை செய்ய முடிவு செய்திருக்கிறார். இதற்காக, எடப்பாடியில் உள்ள மருத்துவ உதவியாளர் உதவியுடன் வண்ணத் தமிழுக்கு விஷ ஊசி செலுத்தி கொலை செய்துள்ளார் என கூறப்படுகிறது.

இதனிடையே, வண்ணத்தமிழ் இறப்பில் சந்தேகம் ஏற்பட்டு போலீசில் புகாரில் அளித்தனர். இதனையடுத்து, விசாரணை மேற்கொண்ட போலீசார், உண்மையை கண்டறிந்துள்ளனர். இந்நிலையில் விஷ ஊசி போட்டு கொன்றதாக வண்ணத் தமிழின் தந்தை பெரியசாமி, மருத்துவ உதவியாளர்கள் பிரபு, வெங்கடேசன் உள்பட 3 பேரை போலீசார் கைது செய்தனர். புற்றுநோயால் அவதிப்பட்டு வந்த மகனை தந்தையே விஷ ஊசி போட்டு கொலை செய்ததாக கூறப்படும் சம்பவம் சேலத்தில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Views: - 501

0

0