தினம் தினம் டார்ச்சர்.. ஒரே வழி இதுதான் : மகனை அடித்தே கொலை செய்த தந்தை : குமரி அருகே பரபரப்பு!!
Author: Udayachandran RadhaKrishnan19 January 2022, 11:00 am
கன்னியாகுமரி : தமிழக கேரள எல்லை பகுதியான பளுகல் பகுதியில் மது போதையில் தகராறில் ஈடுபட்டு தாக்குதல் நடத்திய மகனை தந்தையே அடித்து படுகொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கன்னியாகுமரி மாவட்டம் தமிழக கேரள எல்லை பகுதியான பளுகல் அருகே இடைக்கோடு பகுதியை சேர்ந்தவர் செல்லன் (வயது 70). இவருக்கு ரெஜி குமார் என்ற மகனும் ரெஜினி என்ற ஒரு மகளும் உள்ளனர்.
ரெஜிகுமார் வேலைக்கு ஏதும் செல்லாமல் மது பழக்கத்திற்கு அடிமையாகி மது குடித்து விட்டு அக்கம் பக்கத்தினரிடம் எல்லாம் தகராறில் ஈடுபட்டு வந்துள்ளார். இதனை பெற்றோர் கண்டித்ததால் இரவு நேரங்களில் பெற்றோரிடமும் தகராறில் ஈடுபட்டு அவர்களை தாக்கியும் துன்புறுத்தியும் வந்துள்ளார்.
இதனால் மனவேதனை அடைந்த பெற்றோர் மகனை திருத்துவதற்கு பல வழிகளை கையாண்டுள்ளனர். ஆனால் ரெஜிகுமார் குடிப்பழக்கத்தை விட்டபாடில்லை. இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு குடி போதையில் வந்த ரெஜிகுமார் தாய் தந்தையரை சரிமாரியாக தாக்கிவிட்டு படுத்து தூங்கி உள்ளார்.
மகனின் தாக்குதாலால் ஆத்திரத்தில் இருந்த செல்லன் வீட்டில் இருந்த விறகு கட்டையால் தூக்கத்தில் இருந்த மகனின் தலையில் ஓங்கி அடித்து உள்ளார். இதில் ரெஜிகுமாரின் தலை உடைந்து இரத்தம் அதிக அளவில் வெளியேறி உள்ளது.
இரவு நேரம் என்பதால் அவர்கள் அதனை கண்டுகொள்ளாமல் அப்படியே விட்டுள்ளனர். மறுநாள் காலையில் அக்கம்பக்கத்தினர் தகவல் அறிந்து வந்து இரத்த வெள்ளத்தில் கிடந்த ரெஜிகுமாரை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர் அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்துள்ளனர்.
இதனையடுத்து ரெஜிகுமாரின் சகோதரியான ரெஜினி பளுகல் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அதன்பேரில் பளுகல் போலீசார் வழக்கு பதிவு செய்து கொலை செய்த செல்லனை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் குமரி மாவட்டத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
0
0