கொரோனா பரவல் அச்சம்: உக்கடம் மீன் மார்க்கெட் மூடல்…ஏமாற்றத்துடன் திரும்பிய இறைச்சி பிரியர்கள்…!!

4 July 2021, 9:13 am
Quick Share

கோவை: உக்கடம் மீன் மார்க்கெட் காலை 5 மணியுடன் மூடப்பட்டதால் மீன் வாங்க சென்ற இறைச்சி பிரியர்கள் ஏமாற்றத்துடன் திரும்பினர்.

கோவையில் கொரோனா வைரஸ் தொற்று பாதிப்பு காரணமாக ஊரடங்கு அமலில் உள்ளது. நாளை முதல் அனைத்து மாவட்டங்களுக்கும் ஒரே மாதிரியான தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ள சூழலில், மக்கள் தங்கள் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பி வருகின்றனர்.

இன்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் இறைச்சி பிரியர்கள் உக்கடம் மீன் மார்க்கெட்டுக்கு மீன் வாங்குவதற்காக குவிந்தனர். ஏற்கனவே, உக்கடம் லாரிபேட்டையில் உள்ள மொத்த மீன் மார்க்கெட் காலை 5 மணி வரை தான் செயல்படும் என்று மாநகராட்சி அறிவித்திருந்தது.

ஆனாலும், மக்கள் மொத்த மீன் மார்க்கெட்டிற்கு மீன் வாங்க சென்றனர். அவர்களை தடுத்து நிறுத்திய அதிகாரிகள் திருப்பி அனுப்பினர். இதனை தொடர்ந்து பேரூர் சாலையில் உள்ள சில்லறை மார்க்கெட்டுக்கு மக்கள் சென்றனர். அந்த மார்க்கெட்டும் முழுமையாக அடைக்கப்பட்டுள்ளது. இதனை பயன்படுத்தி வியாபாரிகள் சிலர் சாலையோரம் கடை விரித்து அதிக விலைக்கு மீன்களை விற்பனை செய்து வருகின்றனர்.

மாநகராட்சியின் கெடுபிடி காரணமாக சில்லறை மார்க்கெட்டும் காலை 5 மணிக்கே மூடப்பட்டதாக அங்கிருந்த வியாபாரிகள் தெரிவித்தனர். கொரோனா தொற்றை கட்டுப்படுத்த அதிகாரிகள் முனைப்பு காட்டுவது சரிதான், ஆனால், சில்லறை மார்க்கெட் குறித்து முறையாக அறிவிப்பு வெளியிடவில்லை என்று மாநகராட்சி மீது குற்றம்சாட்டியபடி வேதனையுடன் திரும்பி சென்றனர் இறைச்சி பிரியர்கள்.

Views: - 160

0

0