நீட் தேர்வில் தோல்வி : இனியும் தோற்றுவிடுவோமோ என்ற அச்சத்தில் மாணவி தற்கொலை!

19 August 2020, 11:14 am
Cbe Hanging- Updatenews360
Quick Share

கோவை : கோவையில் நீட் தேர்வுக்கு தயாராகி வந்த மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கோவை ஆர்.எஸ்.புரம் வெங்கடசாமி ரோட்டை சேர்ந்தவர் ரவிச்சந்திரன். அரசு ஊழியர். இவரது மகள் சுபஸ்ரீ (வயது 19). இவர் நேற்று வீட்டில் இருந்த போது அவருடைய அறையில் திடீரென தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இதனால் அதிர்ச்சியடைந்த அவருடைய பெற்றோர் கதறித்துடித்தனர். இது குறித்து போலீசாருக்கு தெரிவிக்கப்பட்டது. தகவல் அறிந்து வந்த சம்பவ இடத்துக்கு வந்த போலீசார் அவருடைய உடலை கைப்பற்றி விசாரித்தனர்.

விசாரணையில், சுபஸ்ரீ பள்ளிப்படிப்பை முடித்துவிட்டு கடந்த இரண்டு ஆண்டுகளாக கோவையில் உள்ள அகாடமியில் நீட் தேர்வுக்கு தயாராகி வந்ததுள்ளார். கடந்த முறை பி.டி.எஸ். படிப்பில் சேர நீட் தேர்வு எழுதினார். அதில் அவர் தோல்வி அடைந்தார். இதனைத்தொடர்ந்து எம்.பி.பி.எஸ்-சில் சேர மீண்டும் நீட் தேர்வுக்கு தயாரானார்.

இந்நிலையில், அடுத்த மாதம் நீட் தேர்வுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதனால் இந்த முறையும் தேர்ச்சி பெறுவோமா? மாட்டோமோ என அவர் மன குழப்பத்தில் இருந்துள்ளார். இதனால் ஏற்பட்ட பயம் காரணமாக மன உளைச்சலில் அவர் தற்கொலை செய்து கொண்டது விசாரணையில் தெரியவந்தது.

இந்த சம்பவம் தொடர்பாக ஆர்.எஸ்.புரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து மேற்கொண்டு விசாரணை நடத்தி வருகின்றனர். கடந்த 2017ம் ஆண்டு அரியலூர் மாவட்டத்தை சேர்ந்த அனிதா என்ற மாணவி நீட் தேர்வில் குறைந்த மதிப்பெண் எடுத்ததால் மருத்துவ கனவு நனவாகாததால் விரக்தியில் தற்கொலை செய்து கொண்டார்.

இதனைத்தொடர்ந்து விழுப்புரம் மாவட்டத்தை சேர்ந்த பிரதீபா என்பவரும் தற்கொலை செய்து கொண்டுள்ளார். நீட் தேர்வால் ஆண்டு தோறும் உயிரிழப்பு தொடர்ந்து கொண்டே இருப்பது வேதனையளிப்பதாக கல்வியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

நீட் தேர்வு அவசியமில்லை என ஒரு தரப்பினரும், நீட் தேர்வு கட்டாயம் வேண்டும் என ஒரு தரப்பினரும் வலியுறுத்தி வரும் வேளையில் கோவையில் மாணவி ஒருவர் தற்கொலை செய்து கொண்டது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Views: - 29

0

0