கோவையில் பெண் அதிகாரி வன்கொடுமைக்கு ஆளான விவகாரம்: கைதான விமானப்படை அதிகாரிக்கு நீதிமன்ற காவல்..!!

Author: Aarthi Sivakumar
27 September 2021, 8:01 pm
Quick Share

கோவை: இந்திய விமான படை பயிற்சி கல்லூரியில் பெண் விமானப்படை அதிகாரி பாலியல்வன்கொடுமை செய்யப்பட்ட விவகாரத்தில் கைது செய்யப்பட்ட சக அதிகாரிக்கு வரும் 30ஆம் தேதி வரை நீதிமன்றக் காவலில் சிறையில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

கோவை பந்தய சாலை பகுதியில் உள்ள விமானப்படை பயிற்சி மையத்தில் பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த 30க்கும் மேற்பட்ட ராணுவ அதிகாரிகள் பயிற்சி மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் கடந்த 10ஆம் தேதி தன்னை சக ராணுவ அதிகாரி ஒருவர் பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாக விமானப்படை பயிற்சி கல்லூரி பெண் அதிகாரி ஒருவர், காந்திபுரம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். ‌

பெண் அதிகாரி அளித்த புகாரின் பேரில் 376 சட்டப் பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் நேற்று முன்தினம் நள்ளிரவில் லெப்டினல் அமிர்தேஷ் என்ற விமானப்படை அதிகாரியை கைது செய்து நீதிபதி முன்பு ஆஜர்படுத்தினர். விமான படை அதிகாரி மீது மாநில காவல் துறையினர் நடவடிக்கை எடுக்க முடியாது என அமிர்தேஷ் தரப்பு வழக்கறிஞர் அபிடவிட் தாக்கல் செய்தார். காவல் துறையினர் பதில் தாக்கல் செய்ய அவகாசம் கேட்ட நிலையில், விமானபடை அதிகாரி லெப்டினல் அமிர்தேஷை ஓரு நாள் மட்டும் ரிமாண்ட் செய்ய நீதிபதி உத்தரவு பிறப்பித்தார்.

இதனையடுத்து லெப்டினல் அமிர்தேஷ் உடுமலை கிளை சிறையில் அடைக்கப்பட்டார். இந்நிலையில் அவரது ரிமாண்ட் கால அவகாசம் நிறைவடைந்த நிலையில் இன்று மீண்டும் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டு இருக்கிறார். முன்னதாக பாதிக்கப்பட்ட பெண் அதிகாரியும் நீதிமன்றத்தில் ஆஜராகி தனது தரப்பு விளக்கத்தை அளித்துள்ளார்.

இந்த வழக்கில் ஆஜராக உள்ள விமானப்படை அதிகாரிகள், குற்றம் சாட்டப்பட்டுள்ள லெப்டினல் அமிர்தேஷை தங்களது கஸ்டடியில் எடுத்து விசாரிக்க கோரிக்கை வைத்துள்ளதாக கூறப்படுகின்றது. அதேவேளையில் பாதிக்கப்பட்ட பெண் அதிகாரி மாநில காவல்துறையே இந்த வழக்கை எடுத்து விசாரிக்க வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்த சூழ்நிலையில் நீதிபதி முன்னிலையில் வழக்கு விசாரணையானது 5 மணி நேரத்திற்கும் மேல் மேலாக நடைபெற்று வந்த நிலையில் கைதானவருக்கு 30ம் தேதி வரை நீதிமன்ற காவல் நீட்டித்து நீதிபதி உத்தரவிட்டார். இதனையடுத்து அவர் மீண்டும் சிறைக்கு அழைத்து செல்லப்பட்டார்.

Views: - 151

0

0