நிதி நிறுவனம் நடத்தி ரூ. 600 கோடி மோசடி : ஹெலிகாப்டர் சகோதரர்களை 15 நாட்கள் காவலில் வைக்க உத்தரவு..!

Author: Babu Lakshmanan
6 August 2021, 11:12 am
helicopter brothers - updatenews360
Quick Share

தஞ்சை : கும்பகோணத்தில் நிதி நிறுவன நடத்தி ரூ.600 கோடி மோசடி செய்த ஹெலிகாப்டர் சகோதரர்களை 15 நாள் காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

எம்.ஆர். சாமிநாதன், எம் ஆர் கணேஷ் ஆகிய இருவரும் கும்பகோணம் ஸ்ரீநகர் காலனியில் வசித்து வருகின்றனர். அவர்களுக்கு சொந்தமாக ஒரு ஹெலிகாப்டர் உள்ளது. இவர்களுக்கு சொந்தமாக பால்பண்ணை, அடகு கடை, நிதிநிறுவனம், நகை கடை உள்ளிட்டவை கும்பகோணத்தில் மட்டுமில்லாமல் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ளன.

மேலும், வெளிநாடுகளில் அவர்களுக்கு சொந்தமாக நகைக் கடைகளும், நிதி நிறுவனங்களும் உள்ளதாக தெரிவித்தார்கள். அவர்களுக்கு சொந்தமாக தங்கச்சுரங்கம் உள்ளதாகவும் தெரிவித்தனர். இதனை நம்பிய கும்பகோணம் பகுதி மக்கள் சுமார் 600 கோடிக்கு மேல் அவர்களது நிதி நிறுவனத்தில் முதலீடு செய்தனர். கடந்த ஒரு ஆண்டுகளாகவே முறையாக பணம் தரவில்லை. நிதி நிறுவனத்தில் பணம் கட்டினால் இரட்டிப்பாக்கி தரப்படும் என்ற விளம்பரத்தை நம்பி பல்வேறு செல்வந்தர்கள் இவர்களது நிதி நிறுவனத்தில் முதலீடு செய்தனர்.

கொரோனோ நோய் தொற்றைக் காரணம் காட்டி நிதி நிறுவனத்தில் முதலீடு செய்தவர்களுக்கு பணம் வழங்காமல் இருந்து வந்தனர். பின்னர் அவர்களுக்கு அளித்த காசோலையும் வங்கியில் பணம் இல்லை என தெரியவந்ததால், கும்பகோணத்தைச் சேர்ந்த ஜவஹருல்லா – பைரோஸ் பானு தம்பதிகள், தங்கள் அவர்களது நிதி நிறுவனத்தில் ரு.14 கோடி பணம் செலுத்தி இருப்பதாகவும், பணத்தை கேட்டால் கொலை மிரட்டல் விடுத்ததாக தஞ்சை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளருக்கு புகார் அளித்தனர்.

அதனை அடுத்து தஞ்சை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் 2 தனிப்படைகள் அமைத்து விசாரணை மேற்கொண்டனர். சாமிநாதன் – கணேஷுக்கு சொந்தமான கும்பகோணம் பண்ணை வீட்டிலிருந்த 13 சொகுசு கார்களை பறிமுதல் செய்தனர். மேலும், நிதி நிறுவனத்தில் பணிபுரியும் 5 ஊழியர்களை கைது செய்தவுடன் கணேசனின் மனைவியும் கும்பகோணத்தில் தனிப்படை போலீசார் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.

இதைத் தொடர்ந்து, தலைமறைவாக இருந்த சாமிநாதன் – கணேசன் ஆகிய இருவரையும் தனிப்படை போலீசார் தேடி வந்தனர். இந்த நிலையில், இன்று புதுக்கோட்டையில் உள்ள அவரது வழக்கறிஞர் பண்ணை வீட்டில் இருவரையும் தனிப்படை போலீசார் கைது செய்தனர். மேலும் அவர்களிடமிருந்து ஒரு இருசக்கர வாகனம், ஒரு கார், 18 சூட்கேஸ்கள் பறிமுதல் செய்தனர்.

மேலும், இவர்களது பால் பண்ணையில் 600க்கும் மேற்பட்ட பசு மாடுகளும், 800க்கும் மேற்பட்ட ஊழியர்களும் பசு மாடுகளைப் பராமரித்து வந்தனர். அந்த பசு மாடுகளுக்கு தீவனம் வைக்கோல் இல்லாததால், அரசு சார்பில் தீவனங்கள் வழங்கப்பட்டது. பசுமாடுகளை பார்த்துக்கொள்ளும் ஊழியர்களுக்கு 70 லட்சத்திற்கு மேல் ஊதிய பாக்கி இருப்பதாக புகார் அளித்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட இருவரையும் காவலில் எடுத்து விசாரிக்க போலீசார் அனுமதி கேட்டதை தொடர்ந்து, அவர்கள் இருவரையும் 19ஆம் தேதி வரை 15 நாள் போலீஸ் காவலில் வைக்க உத்தரவிட்டார். இதையடுத்து இருவரும் கும்பகோணம் கிளைச் சிறையில் அடைக்கப்பட்டனர்.

Views: - 345

0

0