நூற்பாலையில் பயங்கர தீவிபத்து: பல கோடி ரூபாய் மதிப்பிலான நூல்கள் எரிந்து சேதம்..!!

12 April 2021, 7:34 am
cbe1 - updatenews360
Quick Share

கோவை: கருமத்தம்பட்டி அருகே நூற்பாலையில் ஏற்பட்ட பயங்கர தீவிபத்தில் பல கோடி ரூபாய் மதிப்பிலான நூல்கள் எரிந்து நாசமாகின.

கோவை மாவட்டம் கருமத்தம்பட்டி செந்தில்நகர் பகுதியை சேர்ந்தவர் வையாபுரியப்பன். இவர் அப்பகுதியில் சாந்தி சைசிங் மில் என்ற பெயரில் கடந்த 30 வருடங்களுக்கு மேலாக வார்ப்பு நூற்பாலை நடத்தி வருகிறார்.

இந்நிலையில் நேற்று இரவு நூற்பாலையில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. தீ மளமளவென பரவி பற்றி எரிய துவங்கியது. இதில் பல கோடி ரூபாய் மதிப்பிலான நூல்கள் எரிந்து நாசமாகின. இதுகுறித்து தகவலறிந்து அன்னூர், அவினாசி, பீளமேடு, பல்லடம் ஆகிய பகுதிகளில் இருந்து வந்த 5 தீயணைப்பு வாகனங்கள் பல மணி நேர போராட்டத்திற்கு பின்னர் தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.

இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில் கருமத்தம்பட்டி சோமனூர் பகுதிகள் நூற்பாலைகள், விசைத்தறி கூடங்கள் நிறைந்த பகுதியாகும் இந்த பகுதியில் அடிக்கடி தீ விபத்து ஏற்பட்டு வருகிறது. இதன் காரணமாக அதிக அளவில் பொருட்சேதம் ஏற்படுவதால் கருமத்தம்பட்டி பகுதியில் தீயணைப்பு நிலையம் அமைக்க வேண்டி கடந்த பத்து வருடங்களுக்கும் மேலாக கோரிக்கை விடுத்தும் இதுவரை தீயணைப்பு நிலையம் இல்லாததால் வெளியூர்களிலிருந்து தீயை அணைக்க தீயணைப்பு வாகனங்கள் வருவதற்குள் அதிக அளவில் பொருட்கள் எரிந்துவிடுவதால் சேதம் மதிப்பு அதிகம் ஆகிறது.

எனவே கருமத்தம்பட்டி பகுதியில் தீயணைப்பு நிலையம் அமைக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்தனர். தீ விபத்து குறித்து கருமத்தம்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Views: - 59

0

0