தெளிவான காலக்கெடுவை கொடுங்க… மீனவர்கள் கைது விவகாரம் ; மத்திய அரசுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் கடிதம்..!!

Author: Babu Lakshmanan
17 January 2024, 9:50 pm

தமிழக மீனவர்களை இலங்கை கடற்படையினர் அடிக்கடை சிறைபிடிப்பது மீனவ சமூதாயத்தினரிடையே பாதுகாப்பற்ற சூழலை உருவாக்கியுள்ளது என்று முதலமைச்சர் ஸ்டாலின் வேதனை தெரிவித்துள்ளார்.

மத்திய அரசுக்கு அவர் எழுதிய கடிதம் குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது :- நாகப்பட்டினம் மீன்பிடித் துறைமுகத்திலிருந்து (13.01.2024) அன்று கடலுக்கு மீன்பிடிக்கச் சென்ற 10 மீனவர்களையும், அவர்களின் விசைப்படகையும் இலங்கைக் கடற்படையினர் (15.01.2024) அன்று சிறைபிடித்தனர் என்றும், மற்றொரு சம்பவத்தில், ராமநாதபுரம், பாம்பன் பகுதியைச் சேர்ந்த 18 மீனவர்களையும், அவர்களது இரண்டு விசைப்படகுகளையும் (16.01.2024) அன்று இலங்கை கடற்படையினர் சிறைபிடித்துள்ளனர் என்றும் முதலமைச்சர் ஸ்டாலின் தனது கடிதத்தில் கவலைபடத் தெரிவித்துள்ளார்.

கடந்த மூன்று நாட்களில் இலங்கை கடற்படையினர் தமிழ்நாடு மீனவர்களை அடுத்தடுத்து சிறைபிடித்துள்ளனர் என்று தெரிவித்துள்ள முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இத்தகைய கைது நடவடிக்கைகள் மீன்பிடி தொழிலை மட்டுமே தங்கள் வாழ்வாதாரமாக நம்பியுள்ள மீனவ சமூதாயத்தினரிடையே பாதுகாப்பற்ற சூழலை உருவாக்கியுள்ளது என்று கடிதத்தில் தெரிவித்துள்ளார்.

இலங்கை கடற்படையினரின் சிறைபிடிப்பு நடவடிக்கைகளில் எந்த தளர்வும் இருப்பதாகத் தெரியவில்லை என்று குறிப்பிட்டுள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், இத்தகைய தன்னிச்சையான கைது நடவடிக்கைகளை தடுத்திட இலங்கை அரசுக்கு வலியுறுத்திட வேண்டுமென்றும் இலங்கை கட்டுப்பாட்டில் உள்ள அனைத்து படகுகளையும் விடுவிக்க தெளிவான காலக்கெடுவை நிர்ணயிக்க வேண்டுமென்றும் கடிதத்தில் கேட்டுக் கொண்டுள்ளார்.

இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்ட அனைத்து மீனவர்களையும், அவர்களது மீன்பிடிப் படகுகளையும் உடனடியாக விடுவிக்க இலங்கை அரசுடன் இந்த விவகாரத்தை வலுவாக எடுத்துச் செல்ல வேண்டும் என்றும் மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு எழுதியுள்ள கடிதத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கேட்டுக் கொண்டுள்ளார், என தெரிவிக்கப்பட்டுள்ளது.

  • G.V. Prakash understood Sainthavi at the time of separation.. Affection blossomed during the divorce case பிரியும் நேரத்தில் சைந்தவியை புரிந்து கொண்ட ஜி.வி பிரகாஷ்.. விவாகரத்து வழக்கில் மலர்ந்த பாசம்!