முன்னாள் அமைச்சர் வீட்டில் நடத்தப்படும் ரெய்டு அரசியல் பழிவாங்கும் செயல் : பாஜக விமர்சனம்!!

Author: Babu Lakshmanan
10 August 2021, 4:25 pm
kt ragavan - updatenews360
Quick Share

முன்னாள் அமைச்சர் எஸ்பி வேலுமணி வீடுகளில் நடத்தப்பட்டு வரும் லஞ்ச ஒழிப்புத்துறையினரின் சோதனை, அரசியல் பழிவாங்கும் செயல் என்று பாஜக தெரிவித்துள்ளது.

கோவையில் முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, அவரது உறவினர்கள் மற்றும் அதிமுக நிர்வாகிகளுக்கு சொந்தமான 35 இடங்களிலும், தமிழகம் முழுவதிலும் சேர்த்து மொத்தம் 52 இடங்களிலும் இன்று காலை முதல் சுமார் 9 மணிநேரத்திற்கும் மேலாக லஞ்ச ஒழுப்புத்துறையினர் திடீர் சோதனை நடத்தி வருகின்றனர்.

இந்த சூழலில், எஸ்.பி.வேலுமணிக்கு சொந்தமான சுகுணாபுரம் வீட்டின் முன்பு அதிமுக எம்.எல்.ஏ.,க்கள் மற்றும் கட்சி தொண்டர்கள் குவிந்துள்ளனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

இந்த சோதனைக்கு அதிமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் கண்டனம் தெரிவித்து வருகின்றன. அந்த வகையில், முன்னாள் அமைச்சர் எஸ்பி வேலுமணி வீட்டில் நடத்தப்பட்டு வரும் சோதனை குறித்து பாஜக மாநில செயலாளர் கே.டி. ராகவன் கருத்து தெரிவித்துள்ளார்.

அதாவது, “அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்பி வேலுமணி மற்றும் அவரது வீடுகளில் நடத்தப்பட்டு வரும் லஞ்ச ஒழிப்புத்துறையினரின் சோதனை அரசியல் பழிவாங்கும் நோக்கமாக தெரிகிறது,” எனக் கூறினார்.

முன்னதாக, முன்னாள் அமைச்சர்கள் மீது பழிவாங்கும் நடவடிக்கைகளை கைவிட வேண்டும் என்று முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, முன்னாள் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் முன்னாள் அமைச்சர் ஜெயகுமார் ஆகியோரும் கூறியிருப்பது குறிப்பிடத்தக்கது.

Views: - 312

0

0