வீட்டுமனை அளிப்பதாக கூறி சுமார் 500 நபர்களிடம் மோசடி: ரியல் எஸ்டேட் அதிபர் கைது

22 July 2021, 10:21 pm
Quick Share

காஞ்சிபுரம்: காஞ்சிபுரத்தில் வீட்டுமனை அளிப்பதாக கூறி சுமார் 500 நபர்களிடம் 2 கோடியே 80 லட்சம் ரூபாய் வரை மோசடி செய்த ரியல் எஸ்டேட் அதிபரை போலீசார் கைது செய்தனர்.

காஞ்சிபுரம் உலகளந்த பெருமாள் கோவில் மாடவீதியை சேர்ந்தவர் ஸ்ரீதர். இவர் ஸ்ரீபிராப்பர்ட்டி என்ற பெயரில் ரியல் எஸ்டேட் நிறுவனம் நடத்தி வந்தார். காஞ்சிபுரம் வையாவூர் மற்றும் சிறுவள்ளூர் போன்ற பகுதிகளில் வீட்டு மனை அளிப்பதாக கூறி தலா ஒரு நபரிடம் 56 ஆயிரம் ரூபாய் வசூல் செய்தார். குலுக்கல் முறையில் தேர்வு செய்யப்பட்டவர்கள் 56 ஆயிரம் ரூபாய் பணம் கட்டினால் போதும், அவர்களுக்கு அரை கிரவுண்ட் நிலம் அளிப்பதாக வாக்குறுதி அளித்ததன் பேரில், காஞ்சிபுரம் மற்றும் சுற்றுவட்டார பகுதியை சேர்ந்த நடுத்தர மற்றும் ஏழ்மை நிலையில், உள்ளவர்கள் வீடு கட்ட வேண்டும் என்ற ஆசையில் ஸ்ரீதரை நம்பி ஏராளமானோர் பணம் கட்டினர். தன் மீது நம்பிக்கை வரவேண்டும் என்பதற்காக சிலருக்கு மட்டும் வீட்டுமனை கொடுப்பதைப் போல் பாவ்லா செய்துள்ளார்.

இதனை நம்பி ஏராளமானோர் ஸ்ரீதரிடம் பணம் கட்டினர் . குலுக்கல் முறையில் ஆட்கள் தேர்வு செய்யப்பட்டனர். பணம் கட்டிய அனைத்து நபர்களுக்கும் அவர்கள் நம்புவதற்காக பாண்டு பத்திரத்தில் கையொப்பமிட்டு அளித்துள்ளார். பொது மக்களுக்கு வீட்டுமனை அளிப்பதாக கூறி சுமார் 2 கோடியே 80 லட்சம் ரூபாய் வரை மோசடி செய்தது தெரியவந்ததாலும் நாட்கள் செல்ல செல்ல வீட்டுமனையும் அளிக்காமல் பணத்தையும் திருப்பி தராமல் ஏமாற்றியதாலும் பாதிக்கப்பட்டவர்கள் மாவட்ட குற்றப்பிரிவி துறையில் புகார் அளித்தனர். புகாரின் அடிப்படையில் மாவட்ட குற்றப்பிரிவு டிஎஸ்பி தலைமையில் விரிவான விசாரணை செய்யப்பட்டது.

சுமார் 500 க்கும் மேற்பட்ட நபர்களை ஸ்ரீதர் ஏமாற்றி உள்ளது தெரியவந்தது . அதன்பேரில் காஞ்சிபுரத்தில் புத்தேரி தெருவில் பதுங்கி இருந்த ஸ்ரீதரை குற்றப்பிரிவு உதவி ஆய்வாளர் பாபு தலைமையில் உதவி ஆய்வாளர் டீக்காராமன் , சிறப்பு உதவி ஆய்வாளர் ரமேஷ், தலைமை காவலர் சௌந்தரராஜன் ஆகியோர் அதிரடியாக சென்று தலைமறைவாக இருந்த ஸ்ரீதரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறைக்கு அனுப்பினர்.

Views: - 162

1

0