பிரதமரின் விவசாயிகள் நிதி உதவி திட்டத்தில் முறைகேடு: மேலும் ஒரு பெண் இடைத்தரகர் கைது
15 September 2020, 10:15 pmகாஞ்சிபுரம்: பிரதமரின் விவசாயிகள் நிதி உதவி திட்டத்தில் முறைகேடு செய்ததாக காஞ்சிபுரத்தில் மேலும் ஒரு பெண் இடைத்தரகரை போலீசார் கைது செய்தனர்.
பிரதமரின் விவசாயிகள் நிதி உதவித் திட்டத்தின் கீழ் ஆண்டுக்கு ரூ.6 ஆயிரம் வழங்கப்படுகிறது. இத்திட்டத்தின் கீழ் 3 தவணைகளாக தலா ரூ.2000 வீதம் ஊக்கத்தொகை வழங்கப்படுகிறது. இத்தொகை விவசாயிகளின் வங்கிக் கணக்குகளுக்கே நேரடியாக வரவு வைக்கப்பட்டு வந்தது. இத்திட்டத்தில் காஞ்சிபுரம் மாவட்டத்தில் 2812 பேருக்கு ரூ.78 லட்சம் முறைகேடாக அனுப்பப்பட்டது கண்டறியப்பட்டது.
இதில் ரூ.59 லட்சம் சம்பந்தப்பட்டவா்களிடமிருந்து வசூல் செய்யப்பட்டு விட்டது. மீதமுள்ள ரூ.19 லட்சம் அவரவா்களின் வங்கிக் கணக்கிலிருந்து அரசுக் கணக்குக்கு பணப் பரிமாற்றம் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. பறிமுதல் செய்யப்பட்ட மொத்த தொகையும் பிரதமரின் விவசாயிகள் நிதி உதவித்திட்ட வங்கிக் கணக்குக்கு உடனடியாக அனுப்பி வைக்கப்படும் என காஞ்சிபும் மாவட்ட ஆட்சியர் பொன்னையா நேற்று தகவல் தெரிவித்தார்.
இந்த முறைகேட்டில் ஈடுபட்ட ஆத்மா கணினி தொழில் நுட்ப உதவியாளா் சத்யராஜ் என்பவர் கடந்த 13ம் தேதி இரவு வாலாஜாபாத் பேருந்து நிலையம் அருகே கைது செய்யப்பட்டார். அதனைத் தொடர்ந்து 1 எஸ்பி, 3 டிஎஸ்பி, 6 ஆய்வாளர்கள் தலைமையில் காஞ்சிபுரம் செங்கல்பட்டு மாவட்டங்களை சேர்ந்த 50க்கும் மேற்பட்ட கணனி மைய நபர்களை பிடித்து சிபிசிஐடி அலுவலகத்தில் வைத்து விசாரணை செய்தனர். இந்நிலையில் நேற்று முன்தினம் விழுப்புரம் மாவட்டம் உளுந்தூர்பேட்டையை சேர்ந்த லலிதா என்கின்ற 39 வயதுடைய பெண்மணியை சிபிசிஐடி காஞ்சிபுரம் அழைத்து வந்து நேற்று முழுவதும் விசாரணை செய்தனர் .
இறுதியில் இவர் உளுந்தூர்பேட்டை பகுதியில் ஏராளமான நபர்களிடம் ஆதார் கார்டு வாங்கி இந்த முறைகேட்டுக்கு துணை சென்றது கண்டுபிடிக்கப்பட்டது. இடைத்தரகராக செயல்பட்ட லலிதாவை சிபிசிஐடி போலீசார் இன்று கைது செய்து செங்கல்பட்டு ஜேஎம் 1 நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைத்தனர். மேலும் காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள ஒன்றிய அளவில் உள்ள வேளாண் துறை சம்பந்தப்பட்ட ஊழியர்களை சிபிசிஐடி போலீசார் தொடர்ச்சியாக விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.