உஷார் மக்களே உங்களுக்கும் இந்த SMS வரலாம் : ஆஃபர் என கூறி பணம் பறிக்கும் மோசடி கும்பல்… பாதித்த சாலையோர உணவக உரிமையாளர் வேண்டுகோள்!!

Author: Udayachandran RadhaKrishnan
3 July 2022, 7:39 pm
Tirupur Fraud - Updatenews360
Quick Share

திருப்பூர் : ஆஃபர் விலையில் ஆன்லைனில் செல்போன் தருவதாக கூறி சாலையோர உணவக உரிமையாளருக்கு ஹேர் டிரையரை அனுப்பி வைத்த மோசடி கும்பல் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

திருப்பூர் மாவட்டம் பல்லடம் பொள்ளாச்சி சாலை வெங்கிட்டாபுரம் பகுதியைச் சேர்ந்தவர் கண்ணன் (வயது 40). தனது மனைவியுடன் சாலையோர உணவகம் நடத்தி வருகிறார்.

இவருக்கு கடந்த சில நாட்களுக்கு முன்பு வந்த தொலைபேசி அழைப்பு ஒன்றில் பேசிய வித்யா என்ற பெண் உங்களது செல்போன் எண்ணுக்கு புதிய ஆஃபர் ஒன்று அறிமுகம் செய்வதாகவும் அதன்படி விலை உயர்ந்த ஓப்போ ஏ 12 என்ற செல்போன் ஆப்பர் விலையில் ரூ.2500ஐ அருகில் உள்ள தபால் நிலையத்தில் செலுத்தினால் பெற்றுக் கொள்ளலாம் என கூறியதாக சொல்லப்படுகிறது.

இதனை அடுத்து சுமார் 25,000 மதிப்புள்ள அந்த மாடல் செல்போன் தனது மகளின் இணையதள கல்விக்கு பயன்படும் என்று நினைத்த கண்ணன் தனக்கு செல்போன் அனுப்பி வைக்கும்படி கூறியுள்ளார்.

இதனை அடுத்து பல்லடம் தபால் நிலையத்திலிருந்து அழைத்த ஊழியர் ஒருவர் உங்களுக்கு பார்சல் வந்திருக்கிறது என்று கூறியதையடுத்து அங்கு சென்ற கண்ணன் ரூ.2500 பணத்தை கொடுத்து அவரது மனைவி பெயருக்கு வந்திருந்த பார்சலை வாங்கி வந்துள்ளார்.

வீட்டில் வந்து அதனை பிரித்துப் பார்த்து அவரும் அவரது மனைவியும் அதிர்ச்சியில் உறைந்து போயினர். அந்த பார்சலில் விலை உயர்ந்த செல்போனுக்கு பதிலாக தலை முடியின் ஈரப்பதத்தை காய வைக்கும் டிரையர் மெஷின் அதனுடன் பவர் பேங்க் என்ற பெயரில் அனுப்பி வைக்கப்பட்டு இருந்த ஒரு டப்பாவில் இருந்து எறும்பு கொல்லி மருந்து துகள்கள் விழுந்த வண்ணம் இருந்துள்ளது.

இதனால் கண்ணன் மற்றும் அவரது குடும்பத்தினர் நொந்து போயினர். இதனை அடுத்து ரூ. 2500 பணத்தை பெற்றுக் கொண்டு விலையை உயர்ந்த செல்போனுக்கு பதிலாக ஹேர் டிரையர் மற்றும் எலும்புக் கொல்லி மருந்துடன் கூடிய பவர் பேங்க் பெட்டி ஆகியவற்றுடன் தங்களை மோசடி செய்த ஆன்லைன் கும்பல் மீது பல்லடம் போலீசில் கண்ணன் புகார் அளித்துள்ளார்.

பல்லடத்தில் ஆன்லைன் மூலம் ஆஃபரில் குறைந்த விலையில் விலை உயர்ந்த செல்போன் மற்றும் பவர் பேங்க் தருவதாக கூறி மோசடியில் ஈடுபட்டதாக ஆன்லைன் கும்பல் மீது எழுந்துள்ள புகார் இப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Views: - 1037

0

0