“நாங்க சளைத்தவர்கள் அல்ல“: ஜே.இ.இ தேர்வில் அசத்திய அரசு பள்ளி மாணவர்கள்!
18 September 2020, 4:39 pmதிருச்சி : லால்குடி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியைச் சேர்ந்த மாணவர்கள் 2 பேர் இன்ஜினியரிங் படிப்புக்கான ஜேஇஇ (மெயின்) நுழைவுத் தேர்வில் வெற்றி பெற்று பள்ளிக்கு பெருமை சேர்த்துள்ளனர்.
திருச்சி மாவட்டம் லால்குடி அருகே பூவாளூர் பகுதியைச் சேர்ந்த செந்தில்குமார் என்பவர் மளிகைக்கடை வைத்துள்ளார் இவரது மகன் ஹரிகிருஷ்ணன். அதேப்போல லால்குடி அருகே பெருவளநல்லூர் கிராமத்தைச் சேர்ந்த பழனிசாமி, கேபிள் டிவி ஆபரேட்டர். இவரது மகன் சேதுபதி. லால்குடி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் ஹரிகிருஷ்ணன், சேதுபதி ஆகியோர் பனிரெண்டாம் வகுப்பில் உயிரியல் பிரிவில் கல்வி பயின்றனர்.
இந்நிலையில் திருச்சி மாவட்டத்தில் உள்ள பல்வேறு அரசு பள்ளிகளில் படித்து வரும் மாணவ, மாணவிகளும் ஜேஇஇ (மெயின்) நுழைவுத் தேர்வு எழுதி, அதில் வெற்றி பெற்று ஐஐடி, என்ஐடி மற்றும் மத்திய அரசின் இன்ஜினியரிங் கல்லூரிகளில் சேர, திருச்சி என்ஐடி இக்னைட் கிளப் மூலம் மாணவர்களுக்கு பயிற்சி அளிக்க கலெக்டர் சிவராசு ஏற்பாடு செய்தார்.
அதன் படி, இந்த பயிற்சி வகுப்பில் சேர மாணவர்களுக்கு தகுதி தேர்வு நடத்தப்பட்டது. இதில் பல்வேறு அரசு பள்ளிகளைச் சேர்ந்த 30 மாணவ, மாணவிகள் தேர்ச்சி பெற்றனர். இதில் லால்குடி அரசு மேல்நிலைப்பள்ளியைச் சேர்ந்த மாணவர்கள் ஹரிகிருஷ்ணன், சேதுபதி ஆகியோரும் தேர்ச்சி பெற்றனர்.
இதனையடுத்து திருச்சியில் உள்ள என்ஐடி கல்லூரியில் மாணவர்களுக்கு வார விடுமுறை நாட்களில் ஜேஇஇ (மெயின்) நுழைவுத் தேர்வுக்கான பயிற்சி அளிக்கப்பட்டது. இப்பயிற்சி வகுப்பில் சேர்ந்து மாணவர்கள் இரண்டு பேரும் பயிற்சி பெற்று, ஜேஇஇ (மெயின்) நுழைவுத் தேர்வை எழுதினர்.
இதையடுத்து கடந்த 12 ம் தேதி ஜேஇஇ (மெயின்) நுழைவுத் தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டது. இதில் மாணவர்கள் சேதுபதி 91.63% ஹரிகிருஷ்ணன் 88.41%சதவீத மதிப்பெண்கள் பெற்றனர். மொத்த 8.67 லட்சம் மாணவர்கள் ஜேஇஇ (மெயின்) நுழைவுத் தேர்வு எழுதிய நிலையில், லால்குடியைச் சேர்ந்த அரசு பள்ளி மாணவர்கள் இரண்டு பேர் வெற்றி பெற்று பள்ளிக்கு பெருமை சேர்த்துள்ளது குறிப்பிடதக்கது.
மேலும் வரும் செப். 27 ம் தேதி நடக்கவுள்ள ஜேஇஇ (அட்வான்ஸ்டு) தேர்வை மாணவர்கள் ஹரிகிருஷ்ணன், சேதுபதி ஆகியோர் எழுத இருக்கின்றனர். அதேப்போல் மருத்துவ படிப்புக்கான நீட் தேர்வையும் மாணவர்கள் இரண்டு பேரும் எழுதி உள்ளதாக தெரிவித்தனர்.
சாதாரண குடும்பத்தில் பிறந்து, ஜே.இ.இ நுழைவுத் தேர்வில் வெற்றி பெற்று, லால்குடி அரசு மேல்நிலைப்பள்ளிக்கும், அவர்கள் பிறந்த ஊருக்கும் பெருமை சேர்த்த மாணவர்கள் சேதுபதி, ஹரிகிருஷ்ணன் ஆகியோருக்கு முதன்மை கல்வி அலுவலர் சாந்தி, லால்குடி மாவட்ட கல்வி அலுவலர் சண்முகம், லால்குடி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் சுதாகர் உட்பட பள்ளி ஆசிரியர்கள் வாழ்த்து தெரிவித்தனர்.