இடஒதுக்கீடு அடிப்படையில் அரசு பணி – தமிழக அரசின் சீராய்வு மனுவை தள்ளுபடி செய்தது உச்சநீதிமன்றம்..!

2 September 2020, 5:27 pm
Quick Share

தமிழ்நாடு அரசு பணி தொடர்பாக தமிழக அரசு தொடர்ந்த சீராய்வு மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.

தமிழ்நாடு அரசு பணியில் இடஒதுக்கீடு அடிப்படையில் பதவி உயர்வு வழங்க உத்தரவிட முடியாது என உச்சநீதிமன்றம் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் அரசு பணி நியமனங்களுக்கு 69 சதவீதம் இடஒதுக்கீடு என்பது நடைமுறையில் இருந்து வருகிறது. மேலும் பணிமூப்பு மற்றும் பதவி உயர்வுக்கும் சுழற்சி முறையில் இடஒதுக்கீடு முறை செயல்படுத்தப்பட்டு வந்தது.

இதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் பணி நியமனத்தில் சுழற்சி முறையை ரத்து செய்து சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. உயர்நீதிமன்ற உத்தரவை எதிர்த்து தமிழக அரசு மற்றும் டிஎன்பிஎஸ்சி சார்பாக உச்சநீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்யப்பட்டது.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள், கடந்த 2016ஆம் ஆண்டு அரசு ஊழியர்களுக்கு மதிப்பெண் தகுதி அடிப்படையில் மீண்டும் பணி மூப்பு பட்டியலை 12 வாரங்களுக்குள் புதிதாக தயாரிக்க உத்தரவிட்டது. மேலும் உயர்நீதிமன்ற உத்தரவுக்கு தடை கொரிய மனுவையும் உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

இந்த சூழலில் உச்சநீதிமன்றத்தின் உத்தரவை மறு சீராய்வு செய்ய வேண்டும் என தமிழக அரசு சார்பில் மீண்டும் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

இந்த வக்கு, உச்ச நீதிமன்றத்தின் மூத்த நீதிபதி அருண்மிஸ்ரா தலைமையிலான அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, ஏற்கனவே பிறப்பிக்கப்பட்ட அரசு பணியில் பதவி உயர்வு தொடர்பான உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு இறுதியானது எனவும், தீர ஆராய்ந்த பின்னர் தான் நீதிமன்றம் ஒரு இறுதி உத்தரவை பிறப்பித்துள்ளது எனவும் கூறினார்.

அதனால் முன்னதாக வழங்கப்பட்ட உத்தரவை மறுஆய்வு மேற்கொள்ள வேண்டிய அவசியம் மற்றும் முகாந்திரம் இல்லை என்பதால் இதுகுறித்து தாக்கல் செய்யப்பட்ட தமிழக அரசின் சீராய்வு மனுவை தள்ளுபடி செய்வதாக நீதிபதி தெரிவித்தார். இதனால், மதிப்பெண் மற்றும் தகுதி அடிப்படையில் பணி மூப்பு பட்டியல் வெளியிட்டு பதவி உயர்வு வழங்க வேண்டும் என்பது உறுதியாகியுள்ளது.

Views: - 0

0

0