தமிழகத்தில் ஒருவருக்கு உருமாறிய வீரியமிக்க கொரோனா பாதிப்பு : சுகாதாரத்துறை செயலர் தகவல்

31 December 2020, 1:34 pm
radhakrishnan - updatenews360
Quick Share

சென்னை : தமிழகத்தில் ஒருவருக்கு உருமாறிய வீரியமிக்க கொரோனா தொற்று பாதிப்பு இருப்பதாக தமிழக சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்

கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு 100 நாட்களுக்கும் மேலாக ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று குணமடைந்த நோயாளிகளுக்கு மற்றும் மருத்துவர்கள், செவிலியர்கள் அவர்களுக்கு தமிழக அரசின் மக்கள் நல்வாழ்வு துறை அரசு செயலர் ராதாகிருஷ்ணன் பாராட்டு தெரிவித்தார்.

இதைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் அவர் பேசியதாவது :- தமிழகத்தில் கொரோனா மூலமாக ஏற்படும் உயிர் இழப்புகளை குறைப்பதற்காக தமிழக அரசு சார்பாக பல்வேறு நடவடிக்கைகள் தொடர்ச்சியாக எடுத்து வருகிறோம். இந்த வகையில், கடந்த ஆகஸ்ட் மாதத்தில் தமிழகத்தில் ஒரு நாளுக்கு 127 நபர்கள் உயிர் இழந்து வந்த நிலையில், தற்போது ஒரு நாளுக்கு 15 நபர்கள் கொரோனா காரணமாக உயிர் இழந்து வருகின்றனர்.

அதேபோன்று, தற்போது வரை இந்தியாவில் 20 நபர்கள் உருமாறிய கொரோனா நோயால் பாதிப்பிற்கு உள்ளாகி உள்ளனர். தமிழகத்தை பொறுத்தவரை ஒரு நபர் மட்டுமே உருமாறிய கொரோனா நோயால் பாதிப்பிற்கு உள்ளாகி உள்ளார். தற்போது வரை 42 நபர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டு, ஆய்விற்கு அனுப்பப்பட்டு உள்ளது. கடந்த நவம்பர் மாதம் 25 ம் தேதி முதல் வெளிநாடுகளில் இருந்து வந்த நபர்களை கண்டறிந்து கொரோனா பரிசோதனை மேற்கொண்டு வருகிறோம்.

பொதுமக்கள் வருகிற புத்தாண்டை முக கவசத்துடன் அணிந்து கொண்டாட வேண்டும். கொரோனா தொற்று தற்போது சமூக பரவல் என்ற நிலையிலிருந்து மாறி உணவகங்கள் மற்றும் குழுவாக நடைபெறும் நிகழ்ச்சிகளில் இருந்து பரவக் கூடிய நிலை ஏற்பட்டுள்ளது. எனவே, உணவகங்களில் உணவு மற்றும் ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்று உணவை எடுத்துக் கொள்ளக் கூடிய பொதுமக்கள் முடிந்தவரை முகக்கவசம் அணிய வேண்டும். வெளிநாடுகளில் இருந்து தமிழகம் வந்துள்ள பயணிகள் தொடர்ந்து சுகாதாரத் துறையால் கண்காணிக்கப்பட்டு வருகிறது, எனத் தெரிவித்தார்.

Views: - 15

0

0