சவாலான பணியை மேற்கொள்ளும் சுகாதாரக் குழு : படகுகளில் ஆபத்தான பயணம் செய்து மலைக்கிராம மக்களுக்கு தடுப்பூசி!!

2 July 2021, 5:07 pm
Vaccine Journey- Updatenews360
Quick Share

கன்னியாகுமரி : மலைக்கிராம மக்களுக்காக அபாய பயணத்தை மேற்கொண்டு சுகதாரக் குழுவினர் தடுப்பூசி செலுத்தும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

கன்னியாகுமரி மாவட்டம் பேச்சிப்பாறை பகுதியில் சுமார் 50 மலை கிராமங்கள் உள்ளன. இங்கு சுமார் 5000 மலை வாழ் மக்கள் வசித்து வருகின்றனர். இதில் தச்சமலை, மாறாமலை, விளாமலை, தோட்டமலை என 10க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு படகுகள் மூலமாக மட்டுமே செல்ல முடியும்.

குறிப்பாக மழைக்காலங்களில் சுமார் 30 நிமிடம் இந்த மலை கிராமங்களில் இருந்து படகுகள் மூலம் பயணம் செய்து அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு வருவதென்பது சற்று சிரமமான செயல்.

இதனால் இம்மக்கள் வசிக்கும் மலை கிராமங்களுக்கு, ” பேச்சிப்பாறை அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தின்” பொறுப்பு மருத்துவ அலுவலராக பணி புரியும் மருத்துவர்.கார்த்திக் மற்றும் கிராம சுகாதார செவிலியர் புஷ்பலீலா, பென்சால் அடங்கிய குழுவினர் மலை வாழ் மக்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்த படகில் பயணித்து அம்மக்கள் வசிக்கும் மலை கிராமங்களுக்கே நேரில் சென்று தடுப்பூசி போடுவதன் அவசியத்தை வலியுறுத்தி இப்பணியை சேவை மனப்பான்மையுடன் செய்து வருகின்றனர்.

இதுவரை சுமார் 2000-க்கும் மேற்பட்ட மலைவாழ் மக்கள் தடுப்பூசி போட்டுக் கொண்டதற்கு இந்த மருத்துவ குழுவினரின் அர்ப்பணிப்பு உணர்வே காரணம் என்றால் அது மிகையில்லை. ஆரம்பத்தில் தடுப்பூசி போட தயக்கம் காட்டிய மலைவாழ் மக்கள் மருத்துவர்.கார்த்திக் குழுவினரின் அயராத முயற்சியால் தற்போது அவர்களாகவே முன்வந்து தடுப்பூசி செலுத்திக்கொள்ள ஆர்வம் காட்டி வருகின்றனர்.

மலைவாழ் மக்களுக்கான கொரோனா பெருந்தொற்று பேரிடர் காலப்பணி ஒரு சவாலான பணியாக இருந்தாலும் மனதிற்கு நிறைவை அளிப்பதாக இருக்கின்றது என்கிறார் மருத்துவர் கார்த்திக்.

கிராம சுகாதார செவிலியரான பென்சால் கூறும்போது, “மலை கிராமங்களுக்கு கடினமான, கரடு முரடான பாதைகளில் நடந்தும், படகில் பயணித்தும், அம்மக்களை சந்தித்து, அவர்களுடன் நீண்ட நேரம் உரையாடி பின்னர் அவர்கள் தடுப்பூசி போட்டுக்கொண்ட பின் தங்களுக்கு மன நிறைவை அளித்தது என பெருமிதம் கொண்டார்.

Views: - 231

0

0