கோவையில் விடாமல் பெய்த கனமழை : கலையிழந்த தீபாவளி வியாபாரம்… வியாபாரிகள் வேதனை!!
Author: Udayachandran RadhaKrishnan1 November 2021, 10:35 pm
கோவை மாநகர் பகுதிகளில் ஒருமணிநேரம் பெய்த மழைக்கே சாலைகளில் பெருக்கெடுத்து நீர் தேங்கிய நிலையில் தீபாவளி விற்பனை மழையால் பாதிப்படைந்துள்ளதாக வியாபாரிகள் வேதனை தெரிவித்துள்ளனர்.
குறைந்த காற்றழுத்த தாழ்வுபகுதி வலுவடைந்துள்ளதால் தமிழகத்தில் பல்வேறு இடங்களில் கனமழை முதல் மிககனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்து இருந்த நிலையில் கோவை மாவட்டத்தில் இன்று காலை முதல் பரவலாக அவ்வப்போது லேசனமழை பெய்தது.
இந்த நிலையில் மாலையில் தீடீரென கோவையில் ஒரு மணிநேரம் தொடர்ந்து பெய்த கனமழையால் கோவையில் பல்வேறு இடங்களில் சாலைகளில் பெருக்கெடுத்து ஓடிய மழைநீரால் வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமத்திற்கு ஆளானார்கள்.
குறிப்பாக கோவை அவினாசி சாலை லட்சிமி மில் பகுதிகளில் மழைநீர் சாலைகளில் குளம்போல் தேங்கி காட்சியளித்தது.மேலும் தீபாவளி நெருங்கி வரும் நிலையில் கோவை ஒப்பணக்காரவீதி, ராஜவீதி, கடைவீதி, டவுன்ஹால் உள்ளிட்ட இடங்களில் சாலையோரங்களில் தற்காலிகமாக கடையமைத்த வியாபாரிகள் திடீர் மழையால் பெரிதும் பாதிக்கப்பட்டார்கள்.
மழையால் பெரும்பாலான பொருட்கள் நனைந்து விற்பனை பாதிக்கப்பட்டதாகவும் இதனால் பொருட்கள் சேதமடைந்ததாகவும் வியாபாரிகள் வேதனையுடன் தெரிவிக்கின்றனர்.
மேலும் கடந்த இரண்டு வருடங்களாக கொரானாவால் பெரிதும் பாதிக்கப்பட்டு இருந்த நிலையில், இந்த தீபாவளிக்கு நம்பிக்கையோடு பெங்களூர், மும்பை, கொல்கத்தா போன்ற இடங்களில் இருந்து புதியவகை ஆடை ரகங்களை தீபாவளிக்காக விற்பனைக்கு கொண்டுவந்துள்ளோம், ஆனால் தீபாவளி நெருங்கும் நேரத்தில் மழையால் பெரும் நஷ்டம் ஏற்படும் நிலை தற்பொழுது ஏற்பட்டுள்ளதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.
1
0