முதல்வரின் பெயரை பயன்படுத்தக்கூடாது-உங்களுடன் ஸ்டாலின் திட்டத்திற்கு முட்டுக்கட்டை?
Author: Prasad1 August 2025, 1:30 pm
உங்களுடன் ஸ்டாலின் என்ற பெயரில் பொதுமக்களின் குறைகளை கேட்டறியும் திட்டத்தை கடந்த ஜூலை மாதம் 15 ஆம் தேதி தொடங்கிவைத்தார் தமிழக முதல்வர் முக ஸ்டாலின். தமிழ்நாட்டில் உள்ள அனைத்து நகர்புற மற்றும் ஊரகப் பகுதிகளில் “உங்களுடன் ஸ்டாலின்” திட்ட முகாம்கள் நடைபெற்று வருகின்றன.

இந்த நிலையில் “உங்களுடன் ஸ்டாலின்” திட்டத்தில் முதல்வரின் பெயர் இடம்பெறுவதை எதிர்த்து அதிமுகவைச் சேர்ந்த மாநிலங்களவை எம்பி சிவி சண்முகம் உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்திருந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் தமிழக அரசின் திட்டங்கள் குறித்த விளம்பரங்களில் அரசியல் தலைவர்களின் பெயர்கள் இடம்பெறக்கூடாது என உத்தரவு பிறப்பித்துள்ளது. சென்னை உயர்நீதிமன்றத்தின் இந்த உத்தரவு திமுகவுக்கு பின்னடைவாக பார்க்கப்படுகிறது.

வருகிற 2026 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் “உங்களுடன் ஸ்டாலின்” திட்டம் மக்களின் மத்தியில் பேசுபொருளாகியுள்ள நிலையில் உயர்நீதிமன்றம் இத்தீர்ப்பை வெளியிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
